February 4, 2023

கொரோனாவுடன் வாழ்ந்து,பிழைத்து வந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்த அனுபவத்தை எழுதலாமா.. அல்லது இது பலரையும் பயமுறுத்தி விடுமா என்று பல சிந்தனைகளுக்குப் பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன்.

நான் மனோபாரதி. அடையாறில் ஒரு ‘ப்ராண்டிங் ஏஜென்சி’ நடத்தி வருகிறேன். மார்ச் மாதம் லாக் டவுன் அறிவிக்கும் முன்பிருந்தே கோவிட்-19 தொடர்பான எல்லா விஷயத்திலும் ரொம்பவே கவனமாகவும் சூதானமாகவும் இருக்கப் பழகிக் கொண்டோம். லாக் டவுன் அறிவித்த பின்பு மே மாதம் வரை அலுவலகத்திற்குத் தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் தேவையான நபர்களை வைத்துச் செய்து கொண்டோம். யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சில தளர்வுகளைக் கொண்டு வந்த பின்பு மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து நான்காவது வாரம் வரை மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்தோம்.

மே 29ம் தேதி மாலை எனக்கு லேசான காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் ஏற்பட்டது. பயத்தின் காரணமாக அன்று இரவு திருவான்மியூரில் நான் எப்போதும் செல்லும் மருத்துவரிடம் சென்று செக்-அப் செய்து கொண்டபோது எனது உடலில் 97.1 temperature இருந்தது. ஜுரம் இல்லை, சளி இல்லை, தலைவலி இல்லை, இருமல் இல்லை. டாக்டர் மூச்சு விடச் சொல்லிப் பார்க்கும்போது ‘மூச்சு விடும்போது difficulty இருக்கா?’ என்று கேட்டார்.

‘அப்படி எதுவும் இல்லை டாக்டர். உங்களுக்கு எதுவும் தெரியுதா? கோவிட் இல்ல-ல்ல’ என்று பதற்றத்துடன் கேட்டேன்.

‘ஆன்டி-பயாடிக் தர்றேன். ஜுரம் இல்ல. அதனால இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது’ என்று கூறி ஒரு ஊசியும் சில மாத்திரைகளும் கொடுத்தார்.

மே 30ம் தேதி உடலில் சோர்வு ஏற்பட்டது. வீட்டில் சமைத்த உணவின் ருசி தெரியவில்லை. சமைக்கும் வாசனையும் சரியாக உணர முடியவில்லை. அன்று முழுவதும் உடல் சோர்வாகவே இருந்தது. பயம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக வீட்டில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு எதுவும் பரவி விடக் கூடாது என்பதற்காக என்னைத் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கென தனி தட்டும், நான் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், தனியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்தும் வைத்துக் கொண்டேன். அன்று மாலை ஒரு அரை மணி நேரத்திற்கு உள்ளுக்குள் ஜுரம் இருப்பதாக உணர்ந்தேன். நெற்றியில், கழுத்தில் கை வைத்துப் பார்த்தபோது உடலில் உஷ்ணம் எதுவும் இல்லை. அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டும் இருந்தேன். மறுநாள் மே 31 காலை 5 மணி முதல் 7:30 மணி வரை தூங்கினேன்.

மே 31 காலை 8.30 மணிக்கு, முன்னர் சென்ற அதே டாக்டரிடம் சென்றேன். தூக்கமில்லை என்றும் அவ்வப்போது ஜுரம் வருவதுபோல் ஒரு உணர்வு இருப்பதையும் சுவையோ வாசனை உணர்வோ இல்லை என்பதையும் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பதையும் சுட்டிக் காட்டினேன். 98.3 temperature இருந்தது. மூச்சு விடுவதில் சிக்கல் எதுவும் இல்லை தெளிவாக இருப்பதாக டாக்டர் சொன்னார். மீண்டும் ‘கோவிட் 19’ இருக்கிறதா என்று கேட்டேன். அதிகமான ஜுரம் மற்றும் ‘ரன்னிங் நோஸ்’ இருந்தால் மட்டும் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார். ஊசி போட்டுக் கொண்டேன். சில மாத்திரைகளை மாற்றி எழுதினார். தூக்கம் வர மாத்திரை கேட்டேன். வேண்டாம் என்று கூறி, ‘நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா சாப்பிடுங்க’ என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. இரவில் புலம்பியதாக நண்பன் கூறினான். பயம் அதிகமாக இருந்தது.

ஜூன் 1 மாத்திரைகளைச் சரியாக எடுத்துக் கொண்டேன். முந்தைய தினம் போன்றே காலை 5 மணி முதல் 8:30 மணி வரை தூங்கினேன். அதற்கு மேல் உடல் சோர்வாக இருந்தது. பகல் முழுதும் சுறுசுறுப்பாக இருந்தேன். இரவில் மீண்டும் தூக்கம் வரவில்லை. ஜுரம் இல்லை; சளி இல்லை; தலைவலி இல்லை; சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லை. இருமல், தும்மல் இல்லை. விடிந்ததும் ஊருக்குக் கிளம்பி விடுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன். எனக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சொந்த ஊர்.

ஜூன் 2, காலையில் டிராவல்ஸ்-ல் பேசி வாடகைக் கார் ஒன்று பேசிவிட்டு அதன் தகவல்களை வைத்து இ-பாஸ் அப்ளை செய்தேன். 30 நிமிடத்தில் கிடைத்தது. மதியம் 2.30 மணிக்குத் தேவையான உடை, லேப்டாப், ஏற்கனவே வாங்கிய மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கும்பகோணம் தாண்டி திருப்பனந்தாள் என்னும் ஊரில் கார்-ஐ நிறுத்தி இரண்டு இட்லி சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொண்டேன். வலங்கைமான் செக்-போஸ்ட்-இல் போலீஸ் நிறுத்தினார்கள். இ-பாஸ்க்காக நான் கொடுத்த என்னுடைய அத்தனை தகவல்களையும் மீண்டுமொரு முறை சரி பார்த்தார்கள். என்னுடைய அம்மா நீடா மங்கலத்தில் துணை வட்டாட்சியராக இருந்ததாலும், அப்பா நீடாமங்கலத்தில் இந்தியன் வங்கியில் துணை மேலாளராக இருந்ததாலும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு எங்கள் குடும்பம் ஏற்கனவே பரிச்சயமானதாக இருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த காரணத்தினால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று temperature செக் செய்து விட்டு வீட்டுக்குச் செல்லும்படியும் செய்யவில்லை என்றால் மறுநாள் காலை மருத்துவக்குழு வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்கள். அதனால் என் அப்பாவுக்கு போன் செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.

மன்னார்குடி வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30. அங்கே எனக்கு temperature 98.4. என்னுடைய தகவல்கள் மீண்டும் ஒரு முறை சரி பார்க்கப்பட்டது. நான் வந்த காரை அனுப்பிவிட்டு நானும் அப்பாவும் மட்டும் அங்கே கோவிட்-19 டூட்டி-யில் இருந்த SI-யுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவரும் அப்பாவுக்கு நன்றாகத் தெரிந்தவர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் Pregnancy Ward இருப்பதனால் கோவிட்-19 சோதனை கிட் அவர்களுக்காக ரிசர்வ் செய்யப் பட்டிருக்கிறது என்றும் உடனடியாக நாங்கள் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். மணி 11 ஆகிவிட்டதால், காலை செல்லலாம் என்று நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

ஜூன் 3, காலை 10 மணி. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம். voluntary testing கொடுப்பதற்கு வந்திருப்பதாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டோம். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரும்வரை இரண்டு நாள் அங்கேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதற்குத் தயாராகவே வந்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். மதியம் 3.15 மணி அளவில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். அன்றிரவு தூக்கம் சரியாக வரவில்லை. சரியான நேரத்தில் சாப்பாடு தந்தார்கள். இத்தனை பெரியவர் களையும் குழந்தைகளையும் டெஸ்ட் செய்யும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருக்கலாம்.

ஜூன் 4, மதியம் 4.30 மணி. ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக வும் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்திலிருந்து திருவாருர் மெடிக்கல் காலேஜ்-க்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறினார்கள். அதற்கு முன் என் சென்னை முகவரி, ஆபீஸ் முகவரி, மன்னார்குடி வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அதே போல் நான் சந்தித்த நபர்கள், கூட தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோருடைய தகவல்களும் வாங்கிக் கொண்டார்கள். 6:30 மணிக்குத் திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டில் சேர்த்தார்கள்.

எனக்கு ரிசல்ட் வரும்வரை இருந்த பதற்றம், ரிசல்ட் வந்ததும் இல்லை. சரி. பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இனி சரியாவதைப் பற்றி யோசிப்போம் என்று மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டேன்.

ஜூன் 4ம் தேதியிலிருந்து ஜூன் 13ம் தேதி வரை திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தங்கி சிகிச்சை பெற்றேன்.

ஜூன் 4, உடல் சோர்வைத் தவிர எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. பசி இல்லை. முக்கியமாக எனக்கு சத்து இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக சரியாகச் சாப்பிடாததால் உடம்பு ரொம்ப சோர்வாக இருந்தது. இன்னொன்று, மாத்திரை எடுத்துக்கொண்டதால் வாய் கசப்பாகவும் அதனால் சாப்பிட முடியாத நிலைமை இருந்தது. அன்றிரவு இசிஜி, XRAY, Blood Test, Pulse, Temperature, BP எடுத்தார்கள். எல்லாமே நார்மல்.

ஜூன் 5, டாக்டர்களிடம் சென்று பசிக்காகவும் உடல் சோர்வுக்காகவும் மருந்து கேட்டேன். இந்த ப்ராசஸ்-ல் இது வரத்தான் செய்யும், பல்லைக் கடித்துக் கொண்டு நன்றாகச் சாப்பிட்டு விடுங்கள் சரியாகி விடும் என்று கூறினார்கள். அன்றிரவுதான் வாழ்க்கையின் கோரமான பூதத்தைச் சந்தித்தேன். இருமல் ஆரம்பமானது. இருமல் என்றால் பேய்த்தனமான இருமல். இருமினால் எல்லோருக்கும் தொண்டையை அட்ஜஸ்ட் செய்த திருப்தி இருக்கும் அல்லவா? இது அப்படியில்லை. நெஞ்சில் துப்பாக்கியால் துளைத்ததுபோல ஒரு வலி, எவ்வளவு இருமினாலும் போதுமானதாக இல்லை. அது மட்டுமின்றி சளி இருக்கா இல்லையா வெளியே வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருமி இருமி இரண்டு கண்களும் பிதுங்கி வெளியே நின்றன. சாதாரண ஜுரத்துக்கே நமக்கு யாராவது ஒத்தாசையாக இருந்து பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கும். இது ஒரு கையறு நிலை. யாரும் நெருங்கக்கூட முடியாது.

ஜூன் 6, எனக்கு வயது 31. இத்துணை வருடத்தில் இப்படி ஒரு கோரமான கொடூரமான இருமலை நான் உணர்ந்ததே இல்லை. கிட்டத்தட்ட மரணம் நெருங்குகிறது என்று ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நான் தீர்க்கமாக நம்பினேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக இருமினால் என் உயிர் பிரிந்துவிடும் என்று பயம் வலுத்துக்கொண்டே இருந்தது. நெஞ்சு வலி வேறு. இரவு உறங்கச் சென்றால் தூக்கத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று பயமாக இருந்தது. இருமலுக்கு மாத்திரை தந்தார்கள். சீக்கிரமே தூக்கமும் வந்துவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த உறக்கம்.

ஜூன் 7, இந்த ஒரு நாளில் மட்டும் நான் வாழ்வது அன்றுதான் கடைசி என்று என்னவோ சொல்லிக்கொண்டே இருந்தது. இருமலுடன் சேர்ந்து சளியும் வெளிவரத் துவங்கியது. சளி யுடன் ரத்தம் அதிகமாக வந்தது. அதுதான் பயத்தை அதிகமாக்கி பீதியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது. பல நேரங்களில் இதுபோல் நடக்கும். வானிலை மாற்றம், பனிக்காலம் என பல சந்தர்ப்பங்களில் இப்படி ரத்தம் வரும். ஆனால் கொரோனாவை சிவப்புக் கலரிலேயே நிறைய இடத்தில் காட்டி விட்டதால் பீதியாகிவிட்டது. இருமல், மரண பயம், பசியின்மை, உடல் சோர்வு, மாத்திரை, தூக்கம்.

ஜூன் 8, இருமல் வெகுவாகக் குறைந்திருந்தது. கால்களைத் தரையில் ஊன்றினால் நிதானமாக நடக்க முடிந்தது. கொஞ்சம் வலிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. முட்டையும் மதிய உணவும் சாப்பிட்டு நன்றாகத் தூங்கினேன். எழுந்து இரவு உணவு சாப்பிட்டு மீண்டும் தூங்கினேன்.

ஜூன் 9, ஜுரம் இல்லை; இருமல் இல்லை; சளி இல்லை; சுவாசப் பிரச்சனை இல்லை. பசித்தது. உடல் ஆரோக்கியமாக மாறுவதாக உணர்ந்தேன். நன்றாகச் சாப்பிட்டேன். மாத்திரை எடுத்துக்கொண்டேன். நன்றாகத் தூங்கினேன்.

ஜூன் 10 முதல் ஜூன் 12ம் தேதி வரை எல்லாமே மாறிவிட்டது. நன்றாகச் சாப்பிட்டேன். முழுக்க எனர்ஜியுடன் இருந்தேன். எல்லோருக்கும் போன் போட்டு நன்றாக இருப்பதாகச் சொன்னேன். தூக்கம் வரும்போது தூங்கினேன். ஜூன் 12ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி காலை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அன்று மதியம் 12 மணிக்கு திருவாரூரிலிருந்து கிளம்பி 1:00 மணிக்கு மன்னார்குடிக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் டிராப் செய்தார்கள். நிம்மதியாய் ஒரு குளியலைப் போட்டு விட்டு மதிய உணவு சாப்பிட்டுத் தூங்கினேன். வாழ்க்கை வழக்கம் போல் மீண்டும் அழகானது.

உணவு:

காலை 6 மணிக்கு மஞ்சள் கலந்த பால்
காலை 8.30 மணிக்கு நெல்லித்தண்ணி, கபசுரக் குடிநீர், பொங்கல் அ இட்லி, சாம்பார்.
காலை 11 மணிக்கு வாழைப்பழம், அவித்த முட்டை அ சாத்துக்குடி ஜூஸ்.
மதியம் 12.30 மணிக்குக் காய்கறி சூப்
மதியம் 1.30 மணிக்கு சாம்பார், சாதம், ரசம், கூட்டு, நீர் மோர்
மாலை 4 மணிக்கு மஞ்சள் பால், சுண்டல், பிஸ்கட்
இரவு 9 மணிக்கு ஏதாவது உப்புமா மற்றும் சாம்பார் அல்லது முட்டைக் குழம்பு.

சிகிச்சை:

ஜூன் 4 முதல் 13 வரை சிகிச்சையில் இருந்தேன். காலை ஒரு 12 மாத்திரை களும், மதியத்திற்கு 4 அ 5 மாத்திரை களும், இரவு 4 அ 5 மாத்திரைகளும் தந்தார்கள். சத்துக்கு, பாரா செட்டமால், சளி, இருமல், ஜிங்க் என்று தனித்தனி மாத்திரைகள். அதில்லாமல் ஊசி எதுவும் போடவில்லை. தினமும் மருத்துவர்கள் PPE கிட் அணிந்து உள்ளே வந்து நலம் விசாரிப்பார்கள். சந்தேகத்தைப் பூர்த்தி செய்வார்கள்; நம்பிக்கை சொல்வார்கள்; எந்த இடத்திலும் யாருமே பயமுறுத்தவே இல்லை.

நான் சிகிச்சைக்காகச் சேரும் போது 11 பேர் இருந்தோம். நான் வெளிவந்த நாளில் 57 பேர் இருந்தார்கள். இதில் யாருமே உயிருக்காகப் போராட வெல்லாம் இல்லை. இதற்கு முழுப் பொறுப்பு மருத்துவர்களுடையது. 10 -10 நாளாக யாரோ குணமாகிப் போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் மருத்துவர் களுக்கு எங்கள் முகமெல்லாம் ஞாபகம் இருக்குமா என்று தெரியாது. வாய்ப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் கைகளில் ஒரு முத்தமிட்டு வந்திருக்க ஆசைப்பட்டேன். அவ்வளவு பேரும் ஏதோ போருக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சீக்கிரம் வென்று விடுவார்கள் என்று நம்புவோம். இந்த வைரஸ் கிருமி நம்மில் யாருமே எதிர்பார்க்காதது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவர்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை. எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று ஒவ்வொரு வருடமும் நல்ல மாணவர்களைத் தேர்ச்சி செய்து அனுப்பி வைத்து விட்டு அடுத்த பேட்ச் மாணவர்களுக்குத் தயாராகும் ஆசிரியர்கள் போல பலரையும் குணப்படுத்தி அனுப்பி விட்டு நம்பிக்கை யோடு அடுத்தடுத்த நோயாளிகளை வைத்தியம் பார்க்கப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

தேவதைகள் என்றால் அப்படித்தானே!

சிகிச்சை கட்டணம்

Rs.0/- (ஜூன் 3 – ஜூன் 13, 2020)

நன்றி

என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னுடைய பிசினஸ் க்ளையண்ட்ஸ். இவர்கள் தந்த நம்பிக்கையும் செய்த பிரார்த்தனைகளும்தான் எனக்கு மீண்டும் மீண்டும் என் மீதும் இந்த வாழ்க்கையின் மீதும் அதீத நம்பிக்கையைத் தந்துகொண்டே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் முத்தங்களும்.

– Mano Bharathi
14.06.2020