April 2, 2023

சாமியார்களுக்கும் ஜோசியக் காரர்களுக்கும் கொரோனா விடைபெறுவது வரை விடுமுறை கொடுங்கள்!

மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில், பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி வந்தவர் அஸ்லம் பாபா. கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் மாநில நிர்வாகம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்த பின்னரும் அதனைக் கேட்காமல் பக்தர்களை சந்தித்து வந்துள்ளார். கொரோனாவை விரட்டுவதாக கூறி பக்தர்கள் கையில் முத்தம் கொடுத்துள்ளார். கொரோனா அச்சத்திலிருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற பக்தர்களை மத்தியப் பிரதேச சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பாபாவின் முத்தத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பாபாவிடம் முத்தம் வாங்கிச் சென்ற மற்ற நபர்கள் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.

வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் இதனையெல்லாம் கவனத்தில் கொள்வார்களா என தெரியவில்லை. மருத்துவர்களும் கண்டுபிடிப்பாளர் களும்தான் இப்போது நமக்கு கடவுள். சாமியார்களுக்கும் ஜோசியக் காரர்களுக்கும் கொரோனா விடைபெறுவது வரை விடுமுறை கொடுங்கள். அவர்கள் சொன்னார்கள் என ஆபத்தான சோதனைகளில் ஈடுபடாதீர்கள்; சுற்றி இருப்பவர்களையும் சோதனைக்கு உட்படுத்தி அவர்கள் உயிர்களுடன் விளையாடாதீர்கள்.

ஊரடங்கு தளர்த்தபட்டதும் கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று கருதும் சிலரை நான் பார்க்கிறேன். இவர்கள் அன்றாடம் செய்திகளை பார்க்காதவர்கள், படிக்காதவர்கள். தமிழக மக்கள் தொகையில் 75 சதவிகிதத்துக்கு மேல் இப்படிப்பட்டவர்கள் இருக்கலாம். ஆனால், அன்றாடம் செய்திகளை தெரிந்துகொள்பவர்களும் அலட்சியமாக இருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.

சென்னையில், எங்கள் ஏரியாவில் ஒருவர் சென்றவாரம் கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிவந்துவிட்டார். காவல்துறையினர் அவரை தேடி வந்தபிறகுதான் மற்றவர்களுக்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியும்; இன்னொருவர் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தும் மருத்துவமனை சென்றால் ‘கொரோனா பாசிட்டிவ் என்று சொன்னால் என்ன செய்வது’ என்று பயந்து வீட்டிலேயே மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்; முடியாமல் ஆனபிறகு மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கிறார்கள். கொரோனாவில் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். சென்னையில் இருந்து நிறைய பேர் ‘இ-பாஸ்’ வாங்காமல், புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக கருதி, பிரதான சாலைகளை தவிர்த்து, குறுக்கு வழிகளில் ஊருக்கு சென்று, சொந்த ஊர்களில் கொரோனாவை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் முட்டாள்தனத்தால், கொரோனாவில் இருந்து இவர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களும் ஆபத்தை சந்திக்கிறார்கள். சென்னையில் மட்டும் 51 மருத்துவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று இன்று செய்தி. மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள்; அவசியம் இன்றி வெளியில் அலையாதீர்கள்; வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்புள்ளவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தளவாய் சுந்தரம்