October 26, 2021

குமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்!

தமிழ் பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பரிச்சயமான இதழ் குமுதம். எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் 1947 ம் ஆண்டு குமுதம் பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்த சாரதி(வரதராஜனின் தந்தை) மாத சம்பளம் பெற்று மேலாளராக பணிபுரிந்தார். எஸ்.ஏ.பி. அண்ணாமலை கடுமையாக உழைத்து குமுதத்தை தமிழகத்தின் / இந்தியாவின் மிக அதிக பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக மாற்றினார். இவரின் மகன் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜனாக முழு நேரமும் இருப்பதால், பெரியவர்கள் இருவரின் மறைவுக்கு பின் பத்திரிகை நிர்வாகம் முழுதும் பார்த்தசாரதி மகன் வரதராஜன் கையில் நம்பி ஒப்படைத்தார், மேலும் வரதராஜனுக்கு குமுதத்தில் குறிப்பிட்ட அளவு பங்கும் வழங்கப்பட்டது, ஆனால் அதற்கான பணத்தை வரதராஜன் இதுவரை செலுத்தவில்லை.

அதையடுத்து 2011-ம் ஆண்டில் இருந்து தனது தந்தையார் துவங்கிய குமுதம் இதழின் நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்தார். குமுதம் நிர்வாக இயக்குநர் வரதராஜனுடன் நிர்வாகம் தொடர்பாக உருவாகிய முரண்பாடுகளே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. பின்னர், குமுதத்தின் நிர்வாக இயக்குனர் வரதராஜன் மீது நிதிமுறைகேடு புகாரை அளித்தார். பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.அந்த உடன்பாட்டின்படி,குமுதத்தில் இருக்கும் ஒன்பது பத்திரிகைகளில், இரு பத்திரிகைகள் வரதராஜன் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் சரவணனுக்குச் செல்லும்.மற்ற ஏழு பத்திரிகைகளும் டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆச்சியாரின் வசம் வரும்.

2011-ம் ஆண்டு,பத்திரிகை ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று வரதராஜன் தரப்பு கூறியது. எனவே தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது என்று வரதராஜன் வழக்கு தொடர்ந்தார். டாக்டர் பழனி யப்பனிடம் இருக்கும் பங்குகள் ரிசர்வ் வங்கியின் அன்னியச்செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறும் செயல் என கடந்த டிசம்பர் 2014 -ம் ஆண்டு புகார் ஒன்று அளித்திருந்தார். அதை விசாரித்த ரிசர்வ் வங்கி, அன்னியச்செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறும்படி எதுவும் இல்லை என்று கடந்த ஜூன் 15,2015 அன்று தெரிவித்தது. பழனியப்பனிடம் இருக்கும் பங்குகள் எல்லாம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது. அவராக எதையும் வாங்கவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கியது.எனவே இது அந்நியசெல்வாணி மேலாண்மைச் சட்டத்திற்கு கீழ் வராது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நிறுவனங்கள் சட்டத்தீர்ப்பாயத்தில் வரதராஜன் மேல் முறையீடு செய்ததாகவும் அதிலும் ஜவஹர் பழனியப்பன் சார்பில் தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இன்றைய தீர்ப்பில் ஜவஹரின் 3 இலட்சம் பங்குகளைப் பறித்தது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஜவஹர்பழனியப்பன் வசம் குமுதம் வரும் என்று தெரிய வருகிறது. இடைக்காலத்தில் நிறுவனங்கள் சட்ட வாரியத் முன்னாள் தலைவர்
கே.கே.பாலுவை தீர்ப்பாயம் குமுதம் நிர்வாகத்தை கவனிக்க நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..