December 8, 2022

நாம் திருடர்களாக மனநோயாளிகளாக மாறாமல் இருப்பதுதான் பெரிய சவால்!

கடந்த சில நாள்களாக இரண்டுவகையான மனிதர்களை நான் சாலைகளில் கவனித்தேன். முதல்வகை மனிதர்கள் குடிகாரர்கள். எங்கு பார்த்தாலும் சாலைகளில் உருண்டு கொண்டிருக்கிறார்கள். சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சக குடிகாரர் யாரிடமாவது யாசகமாக மது கேட்டு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது உருட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்ன பையன்கள் கூட மைதானங்களில் மறைவிடங்களில் குடிக்கிறார்கள்.

நேற்று ஆர்எஸ் புரம் சாலையில் ஒரு வயதான குடிகாரர் சாலையில் கிடந்தார்… அவருடைய மனைவி அவரை கையை பிடித்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்தார். அரைமயக்கத்தில் கைகளில் காலி பாட்டிலை பிடித்துக்கொண்டிருந்தவர் என்ன நினைத்தாரோ அந்தப் பாட்டியின் தலையிலேயே பாட்டிலால் ஒரே அடி. ரத்தம் கொட்டித்தொடங்கிவிட்டது. கூட்டம் கூடவில்லை. யாரும் உதவிக்கும் வரவில்லை. அருகில் இருக்கிற காவல்துறை ஆட்களிடம் சொன்ன பிறகு உதவிக்கு வந்தார்கள்.

இன்னொரு இடத்தில் இரண்டு குடிகாரர்களுக்குள் மோதல் கைகளில் கற்களோடும் மரக் கட்டைகளோடு அடித்துக்கொண்டிருந்தார்கள். அதை மக்கள் சமூக இடைவெளி விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஊர்முழுக்க பெண்கள் கண்ணீர்விட்டு அழுது கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் அடுத்த பதினைந்து நாள் செலவுக்கு பணமில்லை… ஆனால் இவருக்கு மட்டும் எங்கிருந்தோ காசு கிடைக்கிறது அதை வைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் என்கிறார்கள். கொரானா காலத்தில் நம் சமூகத்தின் மீதும் வீடுகளின் மீதும் மது உண்டாக்கும் பாதிப்புகள் வேறுமாதிரியானவையக இருக்கின்றன.

நான் ஒரு போதும் மதுவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அது சமூகத்தில் விளைவிக்கும் பாதிப்புகளுக்கு எதிரானவன். கொரானாவால் மூன்று மாதங்களாக யாருக்கும் பிழைப்பில்லை. யாரிடமும் பணமில்லை. இருப்பினும் கடன் வாங்கிக்குடிக்கிறார்கள். அடமானம் வைத்து குடிக்கிறார்கள். வீட்டில் பெண்கள் மறைத்துவைத்திருக்கிற பாதுகாப்பு பணத்தை எடுத்து வந்து குடிக்கிறார்கள். Domestic Violence அதிகமாகி இருக்கிறது. மதுப் ரியர்கள் பற்றிய அத்தனை நகைச்சுவைகளுக்கும் மத்தியில் இது குடும்பங்களில் இருக்கிற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தும் உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்புகளை பற்றியும் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம். மதுவால் சீரழிந்த குடும்பங்களை மீட்க இன்சூரன்ஸ்கள் கிடையாது.

அடுத்த வகை மனிதர்கள் மனநோயாளிகள். வேலையிழந்து வருமானமிழந்து அது தருகிற மன அழுத்தத்தில் சிக்கி இருப்பவர்கள். சாலைகளில் நல்ல ஆடைகளில் கைகளை நீட்டி யாசகம் கேட்கிற மனிதர்களை நிறையவே பார்க்க முடிகிறது. அதில் பலரும் வட மாநில தொழிலாளர்களாக இருக்கிறார்கள். திருப்பூரிலும் கோவையில் இத்தகையோரை நிறையவே பார்க்கமுடிகிறது. வீடின்றி வருமானமின்றி பரட்டைத்தலையோடு சுற்றிக் கொண்டிருக் கிறார்கள். எல்லோருக்கும் காசு வேண்டும். உணவு வேண்டும். வீட்டில் காத்திருப்பவர்களை காக்க வேண்டும்.

இந்த இரண்டுவகையோடு அடுத்த சில நாள்களில் மாதங்களில் மூன்றாவது வகை மனிதர்களை நாம் பார்க்க நேரிடலாம். அவர்கள் திருடர்கள். வறுமையும் ஏழ்மையும் வேலையின்மையும் சூளும் காலத்தில் திருட்டு பெருகும் என்பதே வரலாற்று சான்று. இங்கும் அதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. குறிப்பாக குடி நோயாளிகளும் இந்த மன அழுத்தத்தில் சிக்கியவர்களும் திருட்டை தேர்ந்தெடுக்க எல்லா காரணங்களையும் அரசு அமைத்து கொடுத்திருக்கிறது. லட்சத்தை தாண்டிவிட்டது கொரானா பாதிப்பு…

ஆனால் அரசு இந்தியாவை விற்பதில் மும்மரமாக இருக்கிறது. உள்ளூர் அரசோ சாராயம் விற்பதிலும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போக செய்வதிலும் முனைப்பு காட்டுகிறது. வருங்காலம் மிகுந்த கலக்கத்தை உண்டாக்குகிறது. கைகொடுத்து காக்க வேண்டிய அரசோ நம்மை திருடர்களாக மாற்றப்பார்க்கிறது. நாம் திருடர்களாக மனநோயாளிகளாக மாறாமல் இருப்பதுதான் எதிர்காலத்தின் பெரிய சவாலாக இருக்கப்போகிறது!

அதிஷா