September 29, 2021

75% டூ வீலர்களூக்கு இன்ஷூரன்ஸ் கிடையாதாமில்லே!

நம் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்து எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதில் குழந்தைகள் கூட சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. மேலும், வாகனம் ஓட்டுபவர் சரியான லைசென்ஸ் வைத்திருப்பதில்லை. அதேபோல, இன்ஷூரன்ஸ் இல்லாமல் பல வாகனங்கள் சாலைகளில் ஓடுகிறது. இதனால், விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உள்ளது.
insurance 23
இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கினால்தான் அவர்கள் பாலிசியை எடுப்பார்கள் என மத்திய அரசு யோசித்து வருகிறது.சமீபத்தில் இன்ஷூரன்ஸ் தகவல் மையம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இன்னும் 75 சதவீத டூ-வீலர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமலேயே சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.-வும் இதுசம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள கமிட்டிக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, 3 மாதங்களுக்குள் இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை அடையாளம் கண்டு அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இருசக்கர வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் இல்லை. அதேபோல், பெரும்பாலானவர்கள் தங்கள் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கவும் தவறி விடுகிறார்கள். விதிமுறைகளை அமல்படுத்துவதில் அந்த அளவுக்கு வேகம் இல்லாததே இந்த தொய்வுக்கு காரணம் என சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள கமிட்டி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. எனினும், தற்போதைய பொதுவான புள்ளிவிபரங்களின்படி, 82 சதவீத தனியார் வாகனங்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்களே. அவற்றில் 75 சதவீதம் இன்ஷூரன்ஸ் இல்லாமலேயே இயங்கி வருகிறது.