December 4, 2022

இனிமே தியேட்டர்களை மட்டும் நம்பி சினிமா எடுக்க முடியாது! – தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் சினிமா இண்டஸ்ட்ரியில் பெரிய பட்ஜெட் படங்களில் ரிலீஸ்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா, டிவி சிரியல், வெப் சீரிஸ் படப் பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திரைபடங்களை திரையிட முடியவில்லை. சினிமா துறை தினக் கூலி தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் நடைமுறை யில் பொது முடக்கத்தால் ரூ.183 பில்லியன் வர்த்தகத்தைக் கொண்ட இந்திய திரை உலகம் ஒரு மோசமான கட்டத்தை கடந்து வருகிறது. பொது முடக்கத்தின் தாக்கம் திரை துறையில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிற நிலையில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது என்றும். இதனால் தமிழக திரையரங்குகளில் இந்த பொன்மகள் வந்தாள் படம் வெளியாகாது என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

.பொது ஊரடங்கல் பொழுதுபோக்குத் தொழில் ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். “ஒட்டுமொத்த இந்திய பாக்ஸ் ஆபிஸும் பூஜ்ஜியமாக இருப்பது நமது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கடந்த காலங்களில் பிராந்திய அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் பணிநிறுத்தங்கள் இருந்தன. ஆனால், இந்திய அளவில் எதுவும் இல்லை. இது ஒரு பூஜ்ஜிய காலாண்டாக இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கவலை தோய்ந்த குரலுடன் சில தகவல்களை சொல்லி வரும் சூழலில் இந்த பொது முடக்கத்தால் 1000 இருக்கைகள் கொண்ட தியேட்டர் மாதந்தோறும் ரூ.10 லட்சம் இழப்பை சந்தித்து வருவதாக தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.கூடவே இப்போதைய மாற்றாக ஸ்ட்ரீமிங் இயங்குதளங்கள் தியேட்டர்களை அழித்து விடும் என்று நம்பவில்லை. இந்த OTT தளங்கள் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பு எல்ல வகையான திரைப்படங்களை வாங்க தயாராக இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எந்த திரைப் படம் வெற்றி பெறும் எந்த படம் வெற்றி பெறாது என்பது எங்களுக்கேத் தெரியாது. ஆனால் OTTகள் முக்கியமாக ஹிட் திரைப்படங்களை வாங்க விரும்புவதும் அதை இங்குள்ள புரொடியூசர்கள் வரவேற்பதும் சரியில்லை என்றார்.

இப்படி ஒட்டு மொத்த தொழிலே முடங்கிக் கிடக்கும் காலக் கட்டத்தில் பொன் மகள் வந்தாள் பட குழு எடுத்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடு வது இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு ஆடியோ பதிவு வெளியிடுவதும், அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது சுமார் 30 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங் கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவை சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்து வரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்துத் தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை யரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்தா லோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாகச் செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று 30 தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் பாரதிராஜா, கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.ராஜன், கே.ஈ.ஞானவேல் ராஜா, ஹெச்.முரளி, கே. விஜயகுமார், சித்ரா லட்சுமணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஒய் நாட் சஷிகாந்த், ஜி. தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜே. சதீஷ்குமார், சி.வி.குமார், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, எஸ். நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ், ஆர்.கே. சுரேஷ், வினோத் குமார், பி.எஸ். ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் ஆகியோர் உள்ளனர்.