கொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?

கொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?

நம் நாட்டிவில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 4,421 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் 354 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டிருப்ப தாகவும், ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதித்த 8 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது. மேலும், அதிக கொரோனா நோயாளிகள் கண்டறியப் பட்ட தில்லி, மும்பை, பில்வாடா, ஆக்ரா ஆகிய பகுதிகளுக்கு என தனியாக கரோனா தடுப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடி யின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒரு கொரோனா தொற்று பாதித்த நோயாளி, மருத்துவ அறிவுறுத்தல்படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால், 30 நாட்களில் அவர் மூலமாக 406 பேருக்கு கரோனா பரவும் அபாயம் இருப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும் மத்திய நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதியோடு நிறைவடையவிருக்கும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வருகிறது.

Related Posts

error: Content is protected !!