இம்புட்டு பேருக்கு முதல்வராக ஆசை! – ஜெ. முன்னாள் உதவியாளர் அதிருப்தி!

முதலமைச்சர் கனவு காணமுடியுமா? முடியும் என்கிறது இன்றைய வரலாறு. முதலமைச்சராக வேடம் ஏற்று நடிக்கமுடியுமே தவிர கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வரலாறு மறைந்து, இன்று நிறைய பேர் முதலமைச்சர் கனவை கண்டுகொண்டிருப்பது என் தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்திய வரலாறு. சாதாரண தொண்டன்கூட இந்த பதவியை அலங்கரிக்க முடியும் என்று சொல்லி, செய்துகாட்டியவர் எங்கள் அம்மா. அதனால் தான் என்னவோ இன்று நிறைய பேர் இந்த கனவில்.

நான் சொல்வது உண்மை என்பது கனவு காண்பவர்களுக்கு புரியும். இரண்டாக பிரியும் போது குழம்பிய நான் இன்று கேள்விப் படுவதும், தெரிந்துகொண்டதையும் வைத்து பார்க்கும்போது, முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்கிறேன். கலங்கி நிற்கிறேன். ஆக, யாருமே கட்சி நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்க வில்லை, தாம் நல்லாயிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை, யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடாதா. ஜாதக கட்டம் எங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

அடித்துச் சொல்கிறார்கள் நான் முதலமைச்சர் ஆவேன் என்று. கட்டம் தன் கடமையை செய்யும் அதில் மாற்று கருத்தில்லை! எல்லோருமே இப்படி சொல்வதை பார்த்து எனக்கு மயக்கம் வருகிறது. இதற்கு ஏன் மயக்கம் என்று நினைக்கிறீர்களா? முதலமைச்சர், பொதுச்செயலாளர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை எனக்கு தெரிந்தே 25ஐ தாண்டுகிறது. இதில் சிரிப்பு என்னவென்றால் எல்லோரும் ஒன்றாக பயணித்தவர்கள், பயணிக்கப்போகிறவர்கள்.

காலம் கரைய கரைய காட்சிகள் அரங்கேறும்.

என்னுடைய வேண்டுதல் எல்லாம் இறைவா! இந்த தொண்டர்களை காப்பாற்று என்பதுதான்.

பூங்குன்றன்  

ஜெயலலிதா முன்னாள் உதவியாளர்