April 2, 2023

தமிழ்நாடு பட்ஜெட் எப்பூடி? – முழு விபரம்

தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும், துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் தாக்கல் செய்தார். எடப்பாடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் -டான அதில், தமிழ்நாடு மாநிலத்தின் வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி ரூபாய் என்றும், வட்டியல்லாத செலவு 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டியில்லாத செலவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக செலவிட திட்டமிடப்பட்டுள்ள மொத்த தொகை 96 ஆயிரத்து 217 கோடி ரூபாய் ஆகும். உலக மற்றும் தேசிய பொருளாதாரச் சூழலில் வீசி வரும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருவதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய அளவில் கணிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு வளர்ச்சியை காட்டிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது மாநில ஜிடிபியில் 21.83 சதவீதம் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் தொடர்ச்சியாக அதிக அளவில் வருவாயை ஈட்டித் தருகின்றன. பட்ஜெட்டில் வணிக வரிகளின் ஒட்டுமொத்த வசூல் தொகை 1,02,236 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் மீதான மொத்த வரவினங்கள் 1,33,530 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களின் மூலம் மாநிலத்தின் சொந்த வருவாய், 1,49,429 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டின் இறுதில் நிலுவையில் உள்ள நிகரக் கடன் 4,56,600 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 21.83 சதவீதமாக, 25 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.

உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு.

சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு

தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

ஜவுளித் துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு.

உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு.

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு.

தமிழக காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்படோர் நலத்துறைக்கு ரூ.1064 கோடி ஒதுக்கீடு.

இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.

இதுதவிர முக்கியத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு:

நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306 கோடி ஒதுக்கீடு.

நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு.

ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 5654.25 கோடி நிதி ஒதுக்கீடு.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி ஒதுக்கீடு.

மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 5935 கோடி ஒதுக்கீடு.

ஆதி திராவிடர் முன்னேற்றதிற்கு ரூ.4109 கோடி ஒதுக்கீடு.

ஆதி திராவிடர் மாணவர் கல்விக்கு ரூ.2018 கோடி ஒதுக்கீடு.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு.

மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி
சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

பக்கிங்காம் கால்வாய் கூவம் அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ.5439.76 கோடி ஒதுக்கீடு.

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு.

சென்னை- பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும்.

இந்த பட்ஜெட் தாக்கலானதைத் தொடர்ந்து தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பட்ஜெட் சாரம்சங்கள் குறித்து விளக்கிய அவர் ’

நிதி நெருக்கடி உள்ள காலகட்டத்தில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது; என்றார். அத்துடன் தமிழக துணை முதலமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21 ஆண்டிற் கான தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை எனவும், நிதி நெருக்கடி உள்ள காலகட்டத்தில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்றும் தெரிவித்தார்.

மூலதன செலவினத்திக்காக 26% கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில், சாலை வசதி, மின்சார வசதி, பாசன வசதி உள்ளிட்டவற்றிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். ஒவ்வொரு துறைக்கும் இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டு நிதிகளை கணக்கில் வைத்து கொண்டு செலவுகளை துல்லியமாக கணக்கிட்டு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2019-20ம் நிதி ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய வரி வசூல் 7,586 கோடி குறைந்துள்ளது எனவும் அதேநேரத்தில் அடுத்தாண்டு மாநில வளர்ச்சி விகிதம் மற்றும் மாநில வருவாய் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதன் அடைப்படையில் இன்று நடுநிலையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி வழங்குவது தமிழகம் மட்டும் தான், இந்த நிதி அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிக நிதி பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் கடன் அதிகரித்து உள்ளது என்பதை விட ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருமானம் அதிகரித்து வருவதாகவும், மாநில வருமானத்தின் 25% அளவில் கடன் இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதில் தமிழகம் 21.83% மட்டுமே கடன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட 25% மேல் கடன் இல்லாததால் கடன் தொகையால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி உட்பட மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகை 12,263 கோடி ரூபாய்.

தமிழகத்தில் மது விலை உயர்வால் இனி ஆண்டுக்கு 2,000 கோடி வருவாய் கிடைக்கும்.

இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிவாரணத்தொகை 825 கோடியில் இருந்து 1320 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அதே சமயம் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து இதோ:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அ.தி.மு.க.வின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் தேவையான எல்லா வளங்களும் இந்த பட்ஜெட் மூலம் நேரடியாக செற்டைய வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சமாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை. வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக பழனிசாமி அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது.