மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்! – AanthaiReporter.Com

மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு என்றார். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். உண்மை, தர்மம், நீதி தங்கள் பக்கம் இருப்பதாக குட்டிக்கதை ஒன்றையும் முதலமைச்சர் கூறினார்.

சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவியது அதிமுக அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், சுயஉதவிக் குழுக்கள் தொடர்பாக ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், அதன் ஒரு பகுதியாகவே பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதிக அளவில் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை அமைந்துள்ளது எனக் கூறிய அவர், தொழில்நகரமான ராணிப்பேட்டையில் மேலும் அதிக அளவிலான தொழிற்சாலைகளை அமைக்க ஆய்வு நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

23 கோடி ரூபாய் செலவில் ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3 விரிவுபடுத்தப்படும், 10 கோடி ரூபாயில் ராணிப்பேட்டை பேருந்துநிலையம் மேம்படுத்தப்படும், 30 கோடி ரூபாய் செலவில் வேகமங்கலத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.