ஆறு வயது சிறுமி ஹாசினியை கொன்ற தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனி!

ஆறு வயது சிறுமி ஹாசினியை கொன்ற தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனி!

சென்னை போரூர் பகுதியில் ஹாசினி என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது..

போரூர் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஹாசினி (6) என்ற மகளும், தேஜஸ்(4) என்ற மகனும் இருந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த ஹாசினி திடீரென்று காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து மாங்காடு போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி ஹாசினி கற்பழித்து கொல்லப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (24) என்ற மெக்கானிக்கல் என்ஜினீயர் ஹாசினியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், பின்னர் பிணத்தை ஒரு பையில் எடுத்துச் சென்று தாம்பரம்-மதுரவாயல் பைபாசின் ஓரம் அனகாபுத்தூர் அருகே உடலை தீ வைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவனை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இதற்கு ஹாசினியின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அனகாபுத்தூர் அடுக்குமாடி வீட்டை தஷ்வந்தின் தந்தை சேகர் (65), தாய் சரளா (54) ஆகியோர் காலி செய்து விட்டு குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்றனர்.

அங்கு பெற்றோருடன் தஷ்வந்த் வசித்து வந்தான். சூதாட்டத்துக்கு அடிமையான தஷ்வந்த், செலவுக்கு பெற்றோர் பணம் தராத காரணத்தால் டிசம்பர் 2-ந் தேதி தனது தாய் சரளாவை தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மும்பை சென்று தலைமறைவானான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த், பெற்ற தாயையும் கொடூரமாக கொன்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து குன்றத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து மும்பை சென்று அங்கு பதுங்கி இருந்த தஷ்வந்தை கைது செய்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தஷ்வந்த் மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 35-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 45 ஆவணங்கள், 19 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக ஹாசினியை கொலை செய்து உடலை ஒரு பையில் தஷ்வந்த் எடுத்து செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக போலீசார் தஷ்வந்தை புழல் சிறையில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிற்பகல் 3 மணி அளவில், தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன், 4.35 மணி அளவில் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ், சிறுமி ஹாசினியை கொலை செய்த குற்றத்துக்காக தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி கூறினார். மேலும் சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 363-வது பிரிவின் கீழ் 7 ஆண்டுகளும், சிறுமியை அடைத்து வைத்த குற்றத்துக்காக 366-வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும், தடயத்தை மறைத்ததற்காக 201-வது பிரிவின் கீழ் 7 ஆண்டுகளும், மானபங்கம் செய்ததற்காக 354-பி பிரிவின் கீழ் 7 ஆண்டுகளும் தஷ்வந்துக்கு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி கூறினார்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் (‘போக்சோ’) சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும், 8-வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அதாவது, சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையுடன் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து, தஷ்வந்த் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டான்.

error: Content is protected !!