March 21, 2023

இப்படித்தான் இருக்க வேணும் ஜட்ஜ்மெண்ட்?- ஹெல்மெட் விவகாரத்தில் குமுறும் போலீஸ்!

இரு சக்கர வாகன ஓட்டிகளை விட அந்த வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்குகள்தான் அதிகம் ஹெல்மெட் அணிவதாக கருத்து தெரிவிக்கும் நீதிபதிகள் ஒரு பக்கம் இருந்தாலும்  ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட போலீஸார்  இருவர் தலா ரூ.1001 வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடவே போலீஸ் ரெண்டு பேரும் வக்கீல்கிட்டே மன்னிப்பு கடிதாசு கொடுக்கோணுமுன்னும் ஆர்டர் போட்டிருக்குது.

 

நெல்லை மாவட்டம் புளியங்குடி வீரிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் கடந்த அக். 25-ல் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வேலுசாமிக்கும் போலீஸாருக்கு இடையே தகராறு நடைபெற்றது.

இதையடுத்து போலீஸாரை தாக்க முயன்றது, ஆள்மாறாட்டம் உட்பட 5 பிரிவுகளில் புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

இந்நிலையில் வேலுச்சாமி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் தீபாவளிக்கு முதல் நாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரித்த உயர் நீதிமன்றம் வேலுச்சாமிக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுச் சாமியை தாக்கியதாக கூறப்படும் புளியங்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜராகி, வழக்கறிஞரை தாக்கவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர்.

ஆனால் வேலுச்சாமியோ, இரவு முழுவதும் தன்னை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, தனது குழந்தை முன்னிலையில் போலீஸார் தாக்கினர் என்றார்.

அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், வேலுச்சாமி மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து காவலர்கள் இருவரும் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வழக்கறிஞரிடம் கடிதம் அளிக்க வேண்டும். காவலர்கள் இருவரும் தலா ரூ.1001 வீதம் வரைவு காசோலை எடுத்து வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும்.

இந்த வழக்கு முடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் நவ. 4-ல் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை ஏற்று நீதித்துறை நடுவர் நவ. 5-ல் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கை காரணமாக வைத்து வழக்கறிஞர் மீது பார் கவுன்சிலும், காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, வேறு எந்த நடவடிக்கையோ எடுக்கக்கூடாது” அப்பட்டீன்னு  நீதிபதி உத்தரவிட்டார்.

இதை அடுத்து இதே ஐகோர்ட்டில் முடிக்காமல் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை கண்டு கொள்ளாமல் ஹெல்மெட் விவகாரத்தில் போலீஸை கோர்ட் கூண்டில் ஏற்றி ஏகப்பட்ட கேள்விகள் கேட்கும் நீதிபதிகள் ஹெல்மெட் போடாமல் வந்த வக்கீலிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு தண்டம் கட்ட சொல்லும் தீர்ப்பை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறார்களாம்