March 21, 2023

நவம்பர் 1 = தமிழ்நாடு நாளா? வரலாறு முக்கியம் அமைச்சரே!

தமிழக அரசின் சார்பில் நவம்பர் 1-ம் தேதி, முதல்முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப் படுகிறது. இதற்காக ரூ.10 லட்சத்தை தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இந்நிலையில் இது குறித்து ஆன் லைனில் வந்த செய்திக் குறிப்பு இது:

தமிழக அரசு நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சிதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய எல்லை களோடு அமைந்த தமிழகம் 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணமாக என்று அமைந்தது. மெட்ராஸ் ராஜ்தானி (madras presidency) துவக்கத்தில் அழைக்கப்பட்டது. ஆந்திரா, ஒரிசா எல்லை வரை தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை அமைந்தத்து அன்றைக்கு அமைந்திருந்தது மெட்ராஸ் ராஜ்தானி. மொழிவாரியாக மாநிலங்கள் அதன் எல்லைகளை வரையறுக்க அன்றைய பிரதமர் நேரு குழு ஒன்றை அமைத்தார். அதன் அறிக்கைகளை பெற்று கேரளத்தில் தேவிகுளம், பீர்மேடு போன்ற சில பகுதிகளும், இன்றைய கர்நாடகத்தில் கொல்லேகால் போன்ற சில பகுதிகளும், ஆந்திரா வில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளும் நாம் இழந்து இன்றைய எல்லைகள் அமைந்த தமிழகம் நவம்பர் 1 1956ல் அமைந்தது.

தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத் தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய தென்மலை,நெடு மாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் “நவ கேரளம்” என்று கொண்டாடுகிறது.

கர்நாடகம் “அகண்ட கர்நாடகம்” என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் “விசால ஆந்திரம்” என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் “சம்யுக்த மகாராஷ்டிரம்”, குஜராத் “மகா குஜராத்” என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது. ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.

இப்போது பிரச்சினைக்கும் விஷயத்திற்கும் வருகின்றேன். மாநில எல்லைகள் வரையறுக்கப் பட்டு இன்றைய தமிழகம் பலரின் தியாகத்தால் திருத்தணி, குமரி மாவட்டம் இணைந்தது வேறு. ஆனால் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட தியாகச் சுடர் சங்கரலிங்கனாரின் மகத்தான தியாக போராட்ட நிகழ்வு வேறு. இந்த போராட்டங்கள் நடைபெற்றது 1960 களில் . பின்னர் அறிஞர் அண்ணா முதல மைச்சராகி பெயர் சூட்டியது வேறு. மொழிவாரியாக எல்லைகள் அமைந்து இன்றைய தமிழ்நாடு என 1956ல் அறிவிக்கப்பட்டது வேறு, அண்ணாவால் தமிழ்நாடு என்று 1967ல் பெயர் சூட்டிய நிகழ்வு வேறு.

இருவேறு வரலாற்று தியாக நிகழ்வுகளை ஒரே நிகழ்வாக பார்ப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. இந்த இரண்டு தியாகப் போராட்டங்களையும் தனித்தனியாக தனிக் களமாக வரை யறுத்து வரலாற்றில் இந்த தியாக சீலர்களை குறித்து பதிவேற்ற வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறானது என்பதை உணர்த்தவே இந்த பதிவு. வரலாற்றில் தவறுகள் ஏற்பட்டு விடக்கூடாது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்