குழந்தை சுஜித் சடலமாக மீட்பு..!- வீடியோ!
தமிழகம் தாண்டி உலகெங்கும் உள்ள மனித நேயம் கொண்டவர்களின் பிரார்த்தனை வீணாய் போனது. ஆம்.. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 5 நாட்களுக்கு பிறகு காலை 4.30 மணியளவில் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுஜித் குழிக்குள் விழுந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிகள் பயனளிக்காமல் போனது. அதோடு 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை சுஜித், 88 அடிக்கும் கீழ் சென்றான். ஆனாலும் துளையிடும் அதிநவீன ரிக் இயந்திரங்கள், போர்வெல் என நவீனமான பல சாதனங்கள் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வந்தது. நான்கு நாட்களாக இரவு, பகலாக நடந்த மீட்புப் பணிகளில் பாறைகள் குறுக்கிட்டதால் வேகமாக குழி தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது. மணல், பாறைகள் இருந்ததால் குழி தோண்டுவது சவாலாக இருந்தது. படிமப் பாறைகளை ரிக்கிங் எந்திரம் மூலம் அறுத்தெடுத்தாலும், கடினப் பாறைகளை அறுத்து எடுப்பது என்பது மிகக் கடினமாக இருந்தது.
55 அடி வரை ரிக் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்ட பிறகு நேற்று காலை முதல் போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. இதையடுத்து குழிக்குள் இருக்கும் ஆக்ஸிஜனை ஆய்வு செய்யவும், பாறைகளின் தன்மை குறித்து ஆராயவும் தீயணைப்பு வீரர் திலிப்குமார் 55 அடி ஆழ துளையில் ஏணி மூலமாக இறங்கினார். சில நிமிடங்களுக்கு பிறகு மேலே வந்த திலிப்குமார், உள்ளே உடைபட்ட பாறைகளின் பாகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரிக் இயந்திரத்தில் தோண்டப்பட்ட குழியில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. 82 மணிநேரத்திற்கும் மேலாக 61 அடிக்கு குழி தோண்டப் பட்ட நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு பிறகு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்நிகழ்வை உற்று நோக்கிக்கொண்டிருந்த உலகம் முழுதும் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். காலை 4-30 மணி அளவில் 88 அடி ஆழத்திலிருந்த சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவனின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப்பின் அமைச்சர்கள் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை அடுத்து பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள கல்லறையில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குழந்தை சுஜித் சடலமாக மீட்பு’..! – வீடியோhttps://t.co/MOAMx1bl7B
May his soul Rest In Peace 😓#RIPSujith 🌷#prayforsurjeeth #SaveSujith pic.twitter.com/kctBK8XaRT
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) October 29, 2019