ஏப்ரல் அல்லது அதற்கு பின் பள்ளிகளைத் திறக்கலாம்: 69 சதவீத பெற்றோர் கருத்து!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப் பட்டன. சில மாநிலங்களில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் பகுதி அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தடுப்பூசி தயாரான பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று டெல்லி நிர்வாகம் அறிவித்துவிட்டது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக நாடு தழுவிய இணையவழி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

அதில், 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெற்றோரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறப்பட்டு இருக்கின்றன. அதன்படி, புதிய கல்வியாண்டு ஆரம்பமாகும் ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு பின் பள்ளிகளைத் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதேநேரம் 23 சதவீத பெற்றோர், இம்மாதம் (ஜனவரி) முதலே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு முன்பாக தடுப்பூசி தயாரானாலும், தங்கள் குழந்தைகளுக்கு அதை போட்டுக்கொள்ள 26 சதவீதம் பெற்றோரே விருப்பம் வெளியிட்டு உள்ளனர். 56 சதவீதம் பெற்றோர், தாங்கள் மேலும் 3 மாதகாலம் காத்திருந்து, வெளிவரும் தகவல்கள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து முடிவெடுப்போம் என கூறியுள்ளனர்.