அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமா? அப்ப இதைப் படிங்க!

அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமா? அப்ப இதைப் படிங்க!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்கள் 2019-20 -ம் நிதியாண்டிற் கான அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின்கீழ் பயன்பெற செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆணையர் .கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் 8-ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு உட்பட்ட ஏழை மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 2019-20 ஆம் நிதியாண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் இலக்கீடு நிர்ணயம் செய்து வரப் பெற்று உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணிக்கு செல்லும் மகளிர் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரியும் மகளிர் இத்திட்டத்திற்கான முதன்மை பயனாளிகள் ஆவர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப் படாத தொழிற்பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள மகளிர், கடைகள் / தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர், சுயதொழில் / சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள மகளிர், அரசு உதவிபெறும் நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் / அரசு திட்டங்கள் / சமுதாயம் சார்ந்த அமைப்புகள், ஆகியவற்றில் தொகுப்பு ஊதியம் / தினக்கூலி / ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் மகளிர், வங்கி ஒருங்கிணைப்பாளர் / சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ASHA பணியாளர்கள் தகுதியுடைய பயனாளிகள் ஆவர்.

விண்ணப்பிக்கும் பயனாளிகளில் பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதியதாக வாங்கும் மகளிருக் கான இரு சக்கர வாகனத்தின் விலையில் 50ரூ அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகை மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இரு சக்கர வாகனத்தின் விலையில் 50ரூ அல்லது ரூ.31,250/- இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். வாகனம் வங்கி கடன் மூலம் வாங்கப்பட்டால், மானியத் தொகை பயனாளிகளின் வாகன கடன் கணக்கிற்கு வங்கி மூலம் விடுவிக்கப்படும்.

வாகனம் 01.01.2018 தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். இருசக்கர வாகனமானது புதிய Gearless / Auto Gear வகையாகவும் 125 cc உட்பட்ட குதிரைத்திறன் சக்தி கொண்டதாகவும் இருப்பது அவசியம்.

வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் பயனாளிகளை சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையர்(வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு) மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தின் மேலும், ஒரு முக்கிய அறிவிப்பாக தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பணிக்கு செல்லும் மகளிருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அம்மா இருசக்கர வாகனத்திற்கான வங்கிக் கடன் மானியத் தொகை, வாகன விலையில் 50 சதவீதமோ அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வாகனம் வாங்கிய ஆரம்ப நிலையிலேயே வழங்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர். எஸ். பி. வேலுமணி 19.09.2019 அன்று அறிவித்தார்.

எனவே அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நாளை (24.09.2019) முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என ஆணையர் கோ.பிரகாஷ்தெரிவிச்சிருக்கார்”.

error: Content is protected !!