March 21, 2023

இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான பாஜக அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து வருகிற 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: “இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் அந்த அடையாளத்தை கொடுக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா; கூறியிருப்பதற்கு, திமுகவின் இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.1937ல் இருந்து போராட்டக் களங்களில் நின்று, அன்னை தமிழை திராவிடப் பேரியக்கம் அரண் போல் நின்று வெற்றிகரமாகப் பாதுகாத்து வருகிறது. முதல் களம் 1937-1940, இரண்டாவது களம் 1948-1950, மூன்றாவது களம் 1953-56, நான்காவது களம் 1959-61, ஐந்தாவது களம் 1963-1965, ஆறாவது களம் 1986 என்ற சூழலில் இப்போது மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சால்-தமிழ்மொழியைப் பாதுகாக்க, ஏழாவது களம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றம் மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு எரிய தொடங்கி விட்டது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து “ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் எனப் பெயர் மாற்றி யது”, “சமஸ்கிருத மொழி வாரம்”, “அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தியை முதன் மைப் பாடமாக வைக்க வேண்டும்”, “வங்கிகளில் பணப் பரிவர்த்தனை மின்னஞ்சல்கள், செல்போன் குறுஞ்செய்திகள் அனைத்திலும் இந்தி”, என அவசரம் அவசரமாக, அடுக்கடுக்கான நடவடிக்கைகள் மூலம், செம்மொழியாம் தமிழுக்கும், மற்ற மாநில மொழிகளுக்கும், மத்திய பாஜக அரசு வஞ்சகம் செய்வதையும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை தாய் மொழிகளாக கொண்டோரைத் தாழ்த்தி இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட முயற்சி செய்வதையும், யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தக்க எதிர்வினை ஆற்றாமல், காலத்தை வீணாக்க மாட்டார்கள்.மத்தியில் இரண்டாவது முறை யாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மூர்க்கத்தனமான முறையில் இந்தி திணிப்பில் ஈடுபட்டு-இந்தியாவை “இந்தி” மயமாக்க திட்டம் தீட்டிச் செயல் படுவது, மிகுந்த கவலையளிக்கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணித்து-மத்திய அரசின் உள்துறை அமைச்சரே இந்தி மொழிக்கு மட்டும்” ஆஸ்தான தூதுவராக” மாறுவது, அரசியல் சட்டம் அளித்துள்ள மொழி வாரி மாநிலங்கள் எனும் அடிப்படைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே “இந்தித் திணிப்பை”உடனடியாகக் கைவிட்டு, நாட்டை முன்னேற்றும் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை, இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. “இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்” என்று கூறி, மாநிலங்களின் மொழியுணர்வு-குறிப்பாக தமிழ் மொழி உணர்வை அவமதித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது கருத்தை திரும்பப் பெற்று, நாடு மேம்பட வழிவிட வேண்டும் என்றும்; மக்கள் அளித்திருக்கும் பெரும் பான்மையை, நாட்டில் கிளர்ச்சிகள்மூலம் அமைதி இன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியும் களம் காணத் தயாராகிறது திமுக.அன்னைத் தமிழுக்கும் பிற மாநிலத்தவரின் தாய்மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டிய பொறுப்பு பெரியார்-அண்ணா-தலைவர் கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் திமுகவிற்கு இருக்கிறது. பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதற்கட்டமாக திமுக வருகிற 20ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின்படி, திமுகவினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்பதுடன், இளைஞர்கள்- மாணவ, மாணவியர்-மகளிர்- தமிழுணர்வு கொண்ட சான்றோர்-ஆன்மீக வழிநடப்போர் என அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து-ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு முழங்கிட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. “வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது தமிழாக இருக்கட்டும்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின், மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தித் திணிப்பு கருத்தைக் கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை 20ம் தேதி காலை 10 மணி அளவில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் போராட்டக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:தோழமைக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமா?முதற்கட்டமாக, இந்தப் போராட்டங்களை திமுக சார்பில் அறிவித்திருக்கிறோம். அடுத்து என்ன நடக்கவிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து என்ன பதில் வருகின்றது என்பதைப் பொறுத்து, அதற்குப்பிறகு தேவைப்படின் அடுத்தகட்டமாக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு, ஒத்தக் கருத்துடைய கட்சிகளோடு கலந்துப் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுத்து அறிவிப்போம்.தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?நாங்கள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் அதற்கெல்லாம் தெளிவாக விளக்கம் சொல்வோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.