இறந்த பிறகும் மனித உடல்களில் ஒரு ஆண்டு வரை அசையும் தன்மை இருக்கும் என்று சமீபத்திய விஞ்ஞான ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிசன் வில்சன் மற்றும் அவரது குழுவினர் 17 மாதங்களுக்கும் மேலாக ஒரு சடலத்தின் அசைவுகளை தொடர்ந்து டைம்-லேப்ஸ் புகைப்படம் எடுத்தல் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் கேம்ஸ்பரில் உள்ள சடல பாதுகாப்பு மையத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆராய்ச்சி மையம் பிரேத பரிசோதனை இயக்கத்தில் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அலிசன் வில்சன் குழுவினரின் கண்டுபிடிப்புகள் “தடய அறிவியல் : சினெர்ஜி” இதழிலில் வெளியாகி உள்ளது.

இது குறித்து அலிசன் வில்சன் கூறுகையில், இறந்த பிறகும் மனித உடல்களில் ஓராண்டு வரை அசைவுகள் இருப்பதை கண்டறிந்துள்ளதாக கூறினார். ஒரு உடலின் மீது கைகளை வைத்து, பிரேத பாதுகாப்பு மைய மேஜையில் கிடத்தி இருந்த நிலையில், அந்த சடலத்தின் கரங்கள் உடலின் மீது இருந்து கீழே விழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உடல் தசைகளில் ஏற்படும் மாற்றம், உடல் விறைத்து போவது, தசை நார்களில் ஏற்படும் வறட்சி, ஆகியவற்றால், இந்த அசைவு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கங்கள் உடல் சிதைவு செயல்முறையுடன் தொடர்புடையவை என்று வில்சன் கூறினார்.