November 29, 2021

ரஷ்யாவின் மேம்பாட்டிற்கு இந்தியா கடனுதவி!

நம் நாட்டுக்கு என்னவென்னவோ தேவை இருக்கும் போதுரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மேம்பாட்டிற்கு, இந்திய மதிப்பில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5ஆவது கீழைப் பொருளாதார பொதுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரஷ்யாவுடன் தோளோடு தோள் இணைந்து உற்ற தோழனாக இந்தியா நடைபோடும் என்றார். இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு, பெருநகரங்களை மையப்படுத்தி, அரசுகளுக்கு இடையேயான உறவாக மட்டுமல்லாமல், மக்களுக்கு இடையேயான உறவாகவும், நெருங்கிய வர்த்தக உறவாகவும் திகழ்கிறது என்றார்.

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பகுதியுடனான இந்தியாவின் தொடர்புகள் நீண்ட நெடுங்காலத் திற்கு முற்பட்டவை என்றும் மோடி கூறினார். விளாடிவாஸ்டோக் நகரில் தூதரகம் அமைத்த முதல் நாடு இந்தியாதான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மேம்பாட்டிற்காக இந்தியா 1 பில்லியன் டாலர்கள் தொகை, அதாவது சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியாக வழங்கும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். “கிழக்கு நோக்கி செயல்படுதல்” என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, கிழக்காசிய பகுதிகளில் துடிப்பான செயல்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு  இரு நாடுகளிடையேயான பொருளாதார உறவில் புதிய பரிமாணத்தை சேர்க்கும் எனவும் மோடி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில், “தூரக் கிழக்கில் செயல்படுதல்” என்ற கொள்கையையும் மோடி அறிவித்தார்.

ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான கொள்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான மேலும் ஆழமான உறவுகள் பேணப்படும் என்று குறிப்பிட்ட மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்வதாகவும், ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளில் வாழும் இந்தியர்களும் அப்பகுதியின் வளர்ச்சிக்கு துடிப்புமிக்க பங்களிப்பார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவின் பைக்கால் ஏரிக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள பகுதி, தொலைதூர கிழக்குப் பகுதி என குறிப்பிடப்படுகிறது. இது, சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகே உள்ள பகுதியாகும். தொலைதூர கிழக்குப் பகுதியில், ஷஹாலின் தீவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் 20 சதவீத பங்குடன் கூட்டாளியாக உள்ளது.

சைபீரியாவிலும் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனத்திற்கு எண்ணெய் வயல்கள் உள்ளன.  கிழக்கு சைபீரியாவில் எண்ணெய் வயல்களில் ஐஓசி நிறுவனத்திற்கும் பங்குகள் உள்ளன. தொலைதூரக் கிழக்குப் பகுதியின் மேம்பாட்டிற்கான ரஷ்ய அதிபரின் தொலைநோக்கு பார்வைக்கும் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

தொலைதூரக் கிழக்குப் பகுதியை மேம்படுத்துவதற்கே, முதல் முன்னுரிமை என புதின் அறிவித்திருப்பது, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல்தொடர்பு என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதையும் மோடி அப்போது சுட்டிக்காட்டினார். இந்த மாநாடு நடைபெற்ற விளாடிவாஸ்டோக் நகரமும் தொலைதூரக் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.