பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் சமுதாயத்தை சீரழிப்பதாக கூறி அனைத்து மக்கள் கட்சியின் தலைவரான ராஜேஸ்வரி பிரியா ஆர்ப்பாட்டம் நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தவர் ராஜேஸ்வரி பிரியா. நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் அனைவருக்கும் எரிச்சல் இருந்தது. இதனை பொதுவெளியிலேயே ராஜேஸ்வரி பிரியா வெளிப்படுத்தினார். கட்சியில் இருந்து தன்னுடைய அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.

கட்சியிலிருந்தும் விலகினார். கட்சியிலிருந்து விலகியவுடன் மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசினார். உடனே அவர் மக்கள் நீதி மையத்தில் சேரப்போகிறார் என்ற வதந்திகள் பரவின. ஆனால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் “அனைத்து மக்கள் கட்சி” என்று சொந்தமாக கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் முதல்முறையாக கமலஹாசனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து பலவிதமாக போராட்டம் நடத்தி வருகிறார். இன்று காலை போராட்டத்தில் அவர் பேசியதாவது: “பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர்.

அவர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை பற்றி ஒன்றும் தெரியாது. இவர்கள் ஏன் தமிழில் நடிக்க வேண்டும். இவர்களுக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அரைகுறையாக ஆடை அணிந்து 60 கேமராக்கள் இருப்பது பற்றி கூட கவலையின்றி அநாகரீகமான செயல்களில் அவ்வப்போது ஈடுபடுகின்றனர்.

இவர்களின் கோபம் ஈகோ காதல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கு நமக்கு என்ன அவசியம். யாராவது ஒரு நடிகை அல்லது நடிகரை மையமாகக்கொண்டு அவர்களுக்காக ஆர்மி அமைக்கின்றனர். உண்மையில் நமக்காக போராடி உயிர் இழக்கும் ராணுவ வீரர்களை நாம் கண்டுகொள்வதில்லை”என்று ஆவேசமாக பேசினார். இந்த பேச்சானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.