முன்னாள் ஜனாதிபதி பிரணாப்-புக்கு பாரத் ரத்னா விருது! -ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!

ஆளும் கட்சியான மோடி பார்ட்டியிடம் அடி பணிந்து விட்ட  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று(ஆக.,8) டெல்லி யில் நடந்த விழாவில் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், பூபேந்திர குமார் ஹாசாரிகா ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரணாப் உள்ளிட்ட மூவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரணாப் பிண்ணனி

பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். எம்.ஏ., வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சட்டப்படிப்பு முடித்தார். கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து உள்ளார்.பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா அமைச்சரவையில் 1982 – 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார்.1984ல் பிரிட்டனை சேர்ந்த ஈரோமனி நாளிதழ், பிரணாப் முகர்ஜியை உலகின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்து பாராட்டியது. இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி துவங்கினார். ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.2009ல் நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூலை 25ல் நாட்டின் 13வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.