கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 எம்.எல்.ஏக்கள்ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும் கர்நாடக அரசு கவிழும் நிலையில் உள்ளது. நேற்றைய கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமளியால் அவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் வஜுபாய் லாலா நேற்று குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாத நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மீண்டும் கெடு விதித்திருந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு மாலையும் நடைபெறவில்லை.

இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் விதித்த கெடுவை கடைபிடிக்க முடியாததால் வரும் விளைவில் இருந்து சபாநாயகர்கதான் என்னை காக்க வேண்டும் எனவும் ஆளுநர் அனுப்பிய கடிதம் தன்னை காயப்படுத்திவிட்டது எனவும் குமாரசாமி குறிப்பிட்டார்.

ஆளுநர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் எனவும் கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குதிரை பேரம் குறித்து ஆளுநருக்கு தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சியினர் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 வரை ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!