September 18, 2021

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி, ஆட்சி அமைத்ததில் இருந்தே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணியில் உள் எம்எல்ஏக்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். பாஜக, ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக காய்களை நகர்த்தி வந்தது.

இந்நிலையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். ஆனால், அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. இதனால் கர்நாடக அரசியல் உச்சகட்டத்தை எட்டியது.

ராஜினாமாவை ஏற்காததால், சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி 15 எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அதேசமயம், சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை கர்நாடக சட்டசபை கூடியது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

விவாதம் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சிவகுமார் பேசுகையில்,”பாஜகவினர் தங்கள் கட்சி எம்எல்ஏ ஸ்ரீமந்த் பட்டேல் கடத்திச்செல்லப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கடத்தப்பட்டுள்ள எம்எல்ஏவின் குடும்பத்தினர் பாதுகாப்பு கோரி எங்களிடம் முறையிடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

அதற்கு ஆதாரமாக, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பட்டேல் மும்பைக்கு விமானத்தில் சென்றுள்ளார். அவருடன் பாஜக தலைவர் லக்‌ஷமன் சவதியும் உடன் சென்றுள்ளார். அதற்கான ஆவணங்களை சபாநாயகரிடம் சிவகுமார் சமர்ப்பித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் குண்டுராவ்,”நேற்று இரவு வரை ஸ்ரீமந்த் பட்டேல் நல்ல உடல்நலத்துடன் அனைத்து இதர காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இருந்துள்ளார். பின்னர், நேற்று இரவே, எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் மட்டும் காணாமல் போயுள்ளதாக தெரியவந்தது. இதில், பாஜகவின் சூழ்ச்சி உள்ளதை நாங்கள் அறிந்துகொண்டோம்.

நேற்று இரவில், அவர் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பின்னர் மும்பைக்கு சிறப்பு விமானம் மூலம் இன்று காலை அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். உடல்நலம் சரியில்லாத நபர் ஏன் இவ்வளவு இடங்களுக்கு பயணம் செய்யவேண்டும்? நிர்பந்தம்தான் காரணம்” என்று குண்டுராவ் குறிப்பிட்டார்.

“மகாராஷ்டிரா காவல்துறையினர், மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதிலிருந்தே ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. பாஜகவே இதற்கு முழு காரணம் என்று. எம்எல்ஏ இந்த கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று சூழ்ச்சி நடக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

”இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம். உள்துறை அமைச்சகம் இதில் தீவிர விசாரணை நடத்தி, எம்எல்ஏவை மீட்டுத் தரவேண்டும்” என்று தினேஷ் குண்டுராவ் கோரிக்கை விடுத்தார். சபாநாயகர் ரமேஷ் குமாரும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சர் எம்.பி.பட்டேலிடம் உத்தரவு பிறப்பித்தார். அரசு முறையாக விசாரிக்காவிட்டால் போலீசாருக்கு நேரடியாக உத்தரவு வழங்கப்படும் எனவும் சபாநாயகர் கூறினார்.

இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி நிலவியது அவை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.