September 25, 2021

தமிழ்நாட்டில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள்!- எடப்பாடி அரிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்திருக்கறது. எனவேதான், நிர்வாக வசதிக்காக, இம்மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘திருநெல்வேலியிலிருந்து பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக அறிவித்துள்ளார். மேலும் புதிய மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாச முத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வருகின்றன.

ஏற்கெனவே, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த நிலையில் நிலையில் தற்போது மேலும் 2 புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன.

2 புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கைகள் வருகின்றன என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். விரைவில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக த்கவல் வருகிறது.