இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக பேசிய ‘தி காரவன்’ (The Caravan) இதழின் ஆசிரியர் வினோத். கே. ஜோஸுக்கு மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிரச்சார் பாரதி தலைவர் டாக்டர். ஏ. சூர்ய பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். வினோத் கூறிய தகவல்கள் தவறானவை என்று மாநாட்டில் அறிவித்தார்.

பிரிட்டன் மற்றும் கனடா அரசுகள் இணைந்து உலகளாவிய ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் லண்டனில் வியாழக்கிழமை அன்று மாநாடு ஒன்றை நடத்தின. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பல பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தியாவிலிருந்து ‘தி காரவன்’ இதழின் நிர்வாக ஆசிரியர் வினோத். கே. ஜோஸ் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என குற்றம்சாட்டினார்.

அவரது வாதத்திற்கு சாட்சியாக இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து வெளியான செய்திகளின் வீடியோ பதிவுகளை அரங்கில் இருந்தவர்களுக்கு காட்டினார் வினோத்.

பிரச்சார் பாரதி தலைவர் கண்டனம்

வினோத். கே. ஜோஸின் உரை மீதான பொது விவாதம் துவங்கிய போது இந்திய அரசின் செய்தி நிறுவனமான பிரச்சார் பாரதியின் தலைவர் டாக்டர்.ஏ. சூர்ய பிரகாஷ் அவரது உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

வினோத். கே. ஜோஸ்
சூர்யபிரகாஷ்

மாநாட்டில் வினோத். கே. ஜோஸ் கூறிய பல தகவல்கள் பொய்யானவை. இதுபோன்ற தவறான தகவல்களை பார்வையாளர்கள் நம்பக்கூடாது என சூர்யபிரகாஷ் எச்சரித்தார். அவர் பேசியதன் விவரம் :

வினோத். கே. ஜோஸ் கூறியதை உண்மை என நம்பி இங்கிருந்து நீங்கள் சென்றால் அது உலகின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும்.

இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல. இந்தியா மிகவும் துடிப்பான நாடு. உலகின் மிக பெரிய பன்முகத்தன்மை கொண்ட சமூகம் கொண்ட நாடு. இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 60 கோடி வாக்காளர்கள் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

ஆனால் உலகில் உள்ள சில ஆர்வலர்களுக்கு இந்திய வாக்காளர்கள் எடுத்த முடிவு பிடிக்கவில்லை. அதன் காரணமாக இதுபோன்ற தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான இது போன்ற உரைக்கு மாநாட்டு நிர்வாகிகள் அனுமதி அளித்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டை பற்றி இவ்வாறு அவதூறாக பேசி யாரும் உலகில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

சென்ற ஆண்டு அமெரிக்காவின் சில பகுதிகளில் இனவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன. அதற்காக அமெரிக்கா ஒரு இனவெறி பிடித்த நாடு என்றோ ஜனநாயகம் இல்லாத நாடு என்றோ கூறிவிட முடியாது.

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் என ஒட்டுமொத்தமாக 20க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. அப்படி இருக்கும் போது இந்தியாவை ஒரே கட்சி தான் ஆட்சி செய்கிறது என கூறுவது முற்றிலும் தவறு.

இந்தியாவின் சில இடங்களில் நடந்த சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் அங்குள்ள சுதந்திரமான, பொறுப்பான ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால் வினோத். கே. ஜோஸ் அந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி இந்தியாவின் ஊடக சுதந்திரத்தை அவமதித்துள்ளார் என்று டாக்டர் சூர்யபிரகாஷ் சாடினார்.

டாக்டர் சூர்யபிரகாஷ் கூறியதை கேட்டு உடனடியாக பதிலளித்து பேசிய நிகழ்ச்சியின் தலைவரான காமன்வெல்த் மற்றும் ஐநாவின் துணை அமைச்சர் லார்ட் அகமது ஆஃப் விம்பிள்டன் தனக்கு இந்தியாவின் ஜனநாயகம் மீது அதிக மரியாதை உள்ளதாகக் கூறினார்.

இனம் சார்ந்த மோதல்கள் குறித்து தனியாக விவாதம் நடத்தலாம். அதேசமயம் ஜனநாயக உலகில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று லார்ட் அகமது தெரிவித்தார்.