August 11, 2022

5 கோடி ரூபா லோனுக்காக 100 ரூபாய் சொத்து ஏலத்துக்கு வந்தது ஏன்? பிரேமலதா பேட்டி – வீடியோ!லா

தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ்ப்பெற்ற நடிகரும், சிறந்த அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் ஐ ஓ பி வங்கியில் வாங்கிய சுமார் 6 கோடி ரூபாய் கடனுக்காக அவரின் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று காலை அதிரடியாக அறிவித்த  செய்தி சகல ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார் .

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும் தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் விஜயகாந்த் . அதிலும் நடிகர் சங்க கடனை அடைத்து மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்ற விஜயகாந்த் தனது வீட்டின் கடன் பிரச்சனை இப்படி வீதிக்கு வரும் அளவிற்கு வைத்திருப்பார் என்று கேள்விகள் எழுந்தன. விஜயகாந்த் பழைய உடல்நிலையில் இல்லாத நிலையில் அவரது கணக்கு வழக்குகளை பிரேமலதாவும் அவரது சகோதரர் எல் கே சுதிசும் பார்த்து வந்தனர்.

இதனால் செய்தியாளர்களை சந்தித்த கடன் விவகாரம் குறித்து விளக்கமளிக்க இருவரும் முடிவு செய்தனர். இதற்காக பிற்பகலில் பிரேமலதா விஜயகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் வழக்கமான மேக்கப்பில் இல்லை. முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தது. தலை கூட ஒழுங்காக வாராமல் காட்சி தந்தார் பிரேமலதா. வழக்கமாக செய்தியாளர் சந்திப்பு என்றால் முழு மேக்கப்பில் உற்சாகமாக வந்து நிற்பவர் அவர். ஆனால் இன்று செய்து அவர்களை சந்திக்கும் போது அவருடைய குரல் உள் வாங்கியிருந்தது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கணீர் கணீர் என்ற பதிலளிக்கக்கூடிய பிரேமலதா இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அனைத்து கேள்விகளுக்கும் பம்மிய நிலையிலேயே பதிலளித்தார். இதற்கு காரணம் ஐஓபி வெளியிட்ட சொத்துக்கள் ஏல அறிவிப்பு தான் என்கிறார்கள்.

இன்று பிரேமலதா அளித்த பேட்டியின் போது, “எங்கள் கல்லூரி ஏலத்துக்கு வந்திருக்கிறது என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள். நாங்கள் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதனால், 2 மாதம் காலஅவகாசம் வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திடம் ஏற்கனவே கேட்டிருந்தோம்.
ஆனால், அவர்கள் போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த பிரச்சினையை சட்டரீதியாக நாங்கள் கையில் எடுத்து தீர்வு காண்போம்.

தற்போதைய என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிலைமை உங்களுக்கு தெரியும். மேலும்… மேலும்… கல்லூரிகளை புதிதாக திறக்க அனுமதி கொடுக்கப்படுவதும், என்ஜினீயரிங் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்ற தகவல் பரப்பப்படுவதாலும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதனால், என்ஜினியரீங் கல்லூரிகளை நடத்துவதே கஷ்டமாக இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான்.

இது ரூ.5 கோடி கடன் பிரச்சினை. பொதுவாக, நேர்மையாக நடப்பவர்களுக்கு சோதனைகள் வரும். இந்த சோதனையில் நாங்கள் வெற்றி பெறுவோம். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். சட்டரீதியாக இந்த பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியே வருவோம். முன்பு விஜயகாந்த் சினிமாவில் நடித்தார், இப்போது நடிக்கவில்லை. எங்கள் கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது. எனது மூத்த மகன் இப்போது தான் தொழில் தொடங்கியிருக்கிறார். இளைய மகன் சினிமாவில் இப்போது தான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால், எங்களுக்கு வருமானம் குறைந்துபோய் உள்ளது. என்றாலும், கஷ்டப்பட்டாவது இந்த கடனை அடைத்து கல்லூரியை மீட்போம்”என்று பிரேமலதா தெரிவித்தார்.

அடிசினல் ரிப்போர்ட் :

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திரையுலகில் போட்டியாக விளங்கியவர் விஜயகாந்த். திரையுலகில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் திருமண மண்டபம், பொறியியல் கல்லூரி, விவசாயம், கேப்டன் டிவி என பல்வேறு தொழில்களிலும் விஜயகாந்த் ஈடுபாட்டுடன் இருந்தார்.

ஆனால் இவை எதையுமே விஜயகாந்த் சுயமாக நிர்வகிக்கவில்லை. திரைப்படம் மூலமாக வரும் சம்பளப்பணம் முதல் பிற தொழில்கள் மூலமாக வரும் வருமானங்களை வரை அனைத்தையும் பிரேமலதா தான் நிர்வகித்து வந்துள்ளார். பிரேமலதா அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த பிறகு அவரது சகோதரரும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கணக்கு வழக்குகளை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்துக்கு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி சொந்தமாக உள்ளது. ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த இந்த கல்லூரி திறமையற்ற நிர்வாகம் காரணமாக தற்போது தள்ளாடி வருகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறவே கிடையாது.

இதனால் வருமானம் இல்லாத நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துக்களை அடமானம் வைத்து சுமார் 6 கோடி ரூபாய் கடனாக பெற்று உள்ளனர் பிரேமலதா மற்றும் எல் கே சதீஷ். கல்லூரி மேம்பாட்டுக்கு என்று கூறி அந்தக் கடனைப் பெற்று சுமார் 5 ஆண்டுகள் வரை ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கல்லூரியில் வருமானமோ முன்னேற்றமும் இல்லை.

இதனால் ஐஓபி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் அவ்வப்போது பிரேமலதா மற்றும் சுதீஷ் கட்டி வந்துள்ளனர். இதற்கிடையே அரசியல் களத்தில் இருவரும் தீவிரமாக இறங்கியதால் ஆண்டாள் அழகர் கல்லூரி மட்டுமல்லாமல் கேப்டன் டிவி உள்ளிட்ட பிற தொழில் நிறுவனங்களையும் அவர்கள் இருவராலும் சரியாக கவனிக்க முடியவில்லை. விஜயகாந்தின் ஆடிட்டரும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் மீதுள்ள கடன் குறித்து முதலிலேயே சுதீஷ் மற்றும் பிரேமலதாவை எச்சரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

கடைசி நேரத்தில்தான் கடன் மற்றும் அதற்கான வட்டி மலைபோல் அவர்கள் முன்னர் வந்து நின்று உள்ளது. கையில் பணம் கருப்பாக இருந்தாலும் வங்கியில் கடனை அடைக்க வேண்டும் என்றால் வெள்ளையாகத்தான் செலுத்த முடியும். இதனால் மூன்று மாத காலம் பிரேமலதா ஐஓபி வங்கி நிர்வாகத்திடம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே போதுமான அவகாசம் கொடுத்து விட்டதாகவும் எனவே பணத்தை உடனடியாக தரவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டுள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் விஜயகாந்தின் வீடு ஆகியவற்றை ஏலத்தில் விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் இதனை பிரேமலதா சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் திடீரென விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விடுவதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து அதிர வைத்துள்ளது ஐஓபி வங்கி நிர்வாகம். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமலதா மற்றும் சதீஷ் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் இருவரின் அலட்சியம்தான் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு வரும் அளவிற்கு நிலைமை மோசமாக காரணம் என்று கூறுகிறார்கள்.