August 12, 2022

அதிகமான பெண்கள் வாக்களித்து அதிகமான பெண் எம்.பி.கள்! – ஜனாதிபதி பெருமிதம்!

இந்த முறை தேர்தலில் 50 சதவீதம் பேர் புதியவர்கள். பெண்கள் அதிகம் ஓட்டளித்த தேர்தல் இதுவாகும். பார்லி.,யிலும் அதிகம் பெண்கள் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

புதிதாக அரசு பொறுப்பேற்ற பின்னர் கூடிய பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைக் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். முன்னதாக ராஷ்ட்டிரபதி பவனில் இருந்து குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பார்லி.,க்கு வந்தார். பாராளுமன்ற வாயிலில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதியை , துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்

பின்னர் கூட்டுக் கூட்டத்தில் தனது உரையை துவக்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது. விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு முழுமையாக பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை சாராம்சம் இதோ;

நாட்டில் வாக்களிக்க முன்வந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களிக்க முன்வந்திருந்தனர். தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள். தற்போது பதவி ஏற்றுள்ள மக்களவையின் பாதி எம்பிக்கள் புதுமுகங்கள். புதிதாக தேர்வாகி வந்துள்ள எம்பிக்கள் மக்கள் பணியை திறம்பட ஆற்ற வேண்டும்.

பல்வேறு துறைகளின் நிபுணர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு தெளிவான முடிவை கொடுத்துள்ளனர். தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல அனைத்து எம்பிக்களும் பணியாற்ற வேண்டும். மக்களின் வாழ்வை சிறப்பாக்குவது தான் மத்திய அரசின் முக்கியமான நோக்கம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனும் மத்திய அரசுக்கு முக்கியம்.

மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே அரசின் திட்டம். புதிய இந்தியாவை நோக்கி மக்களை அழைத்துச் செல்வதே மத்திய அரசின் பிரதான இலக்கு. கடந்த ஐந்து ஆண்டுகால அரசு தங்களுக்கானது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தேச வளர்ச்சியின் பலன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதும் அரசின் மிக முக்கிய தீர்மானம். சுமார் 13 ஆயிரம் கோடி மதிப்பில் விவசாயிகளுக்கான நலத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சிறு, குறு வியாபாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசு திட்டத்தை செயல்படுத்துகிறது.

நாட்டில் தண்ணீர் பஞ்சம் பெரும் சவாலாக உள்ளது. தற்போது தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முழு கவனம் எடுத்து கொள்ளப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கும் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிதாக ஜலசக்தி திட்டம் துவக்கப்படும்.ஏழைகளுக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க அரசு வழி செய்துள்ளது. பிரதமர் நிதி வழங்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இளைஞர்கள் தான் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்கள் தரமான கல்வியை பெற மத்திய அரசு கூடுதல் நிதி உதவி அளிக்கும். வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை இளைஞர்கள் பெற திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கே உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக விளங்குகிறது. முன்னணி கல்வி நிறுவனங்களின் உயர் கல்வி படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும். கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை நவீனமாக்க முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

சுகாதாரத்துறையை மேம்படுத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது . மருந்து பொருட்களை மலிவான விலையில் கிடைக்க நடவடிக்கை. நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.

வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வர நடவடிக்கை.பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி.முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம்

ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது.