கொலைகாரன் படத்தில் அர்ஜுனுக்கு சண்டைக்காட்சிகள் வைக்காததற்காக அவரிடம் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். பட நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத அர்ஜூன் இதில் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

‘இன்றைய சூழலில் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறது. படத்தின் வெற்றிக்கு கதை தான் மிகவும் முக்கியம். என்னதான் பெரிய நடிகர்கள், கலைஞர்கள் பணியாற்றினாலும் கதை தான் இங்கே ஜெயிக்கும். விஜய் ஆண்டனி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான வெற்றி படங்களை தருகிறார். ஆஷிமா மிகவும் அர்ப்பணிப்பு உள்ள நடிகை. எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருக்கிறது. யார் தயாரிப்பாளர் என்றே தெரியாமல் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் கூட மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நல்ல படம் என்றால் எந்த மக்களும் வரவேற்பு தருவார்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் ஆண்டனி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள கொலைகாரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிச்சைக்காரன் படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் கொலைகாரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இதற்கு முன் இயக்கிய லீலை திரைப்படமும் தோல்வியடைந்ததால் கொலைகாரன் படம் அவருக்கும் வெற்றிவாகை சூட்டியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் நடிகர் அர்ஜுனிடம் மன்னிப்பு கோரினார்.

நடிகர் அர்ஜுன் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்பட்டாலும் இப்படத்தில் அவருக்கென சண்டைக்காட்சிகள் இல்லையென்று நிகழ்ச்சியில் பேசிய சிலர் கருத்து தெரிவித்தனர். பின்னர் பேசிய ஆண்ட்ரூ லூயிஸ், “அர்ஜுனுக்கு சண்டைக்காட்சிகள் வைப்பதற்கு எனக்கும் விருப்பம் இருந்தது. எதிர்காலத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகள் வைப்பேன் என உறுதியளிக்கிறேன். கொலைகாரன் படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காததற்காக அர்ஜுனிடம் இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். கொலைகாரன் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருப்பதால் அடுத்த வாரமும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.