August 14, 2022

மார்டன் ஆர்ட் கேள்விபட்டதுண்டா ? அந்த மாதிரிதான் கேம் ஓவர் கதையும். ஆம். மார்டன் ஆர்ட் பார்க்கிற ஒவ்வொருவருக்குமே ஒரு கதை புரியும். சில நேரம் புரியமாலும் கூட போகலாம். அப்படியொரு திரைகதை உத்தியை பயன்படுத்தி கடைசி 30 நிமிடங்கள் நம்மை திரையோடு கட்டிப்போடுகிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

மாதுரவாயல் பகுதியில் ஒரு பெண் இரவு 11 மணிக்கு ஆன்லைனின் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். திடீரென அவர் தலை துண்டித்து கொல்லப்படுகிறார். அதன்பின்பு, நாயகி டாப்ஸியின் கதை ஆரம்பிக்கிறது. அவர், ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார். மனநோயில் பாதிக்கப்பட்டிருக்கிறார். கேம் வீடியோவுக்கான படங்களை வரைந்து கொடுக்கும் ஆர்ட்டிஸ்ட் பணி செய்கிறார். வெளிச்சம் இல்லாமல் அவரால் வீட்டிற்குள் இருக்க முடியாது. அவருக்கு துணையாக கமலா என்பவர் உதவிக்கு இருக்கிறார். ஒரு நாள், தான் விரும்பி வரைந்த டாட்டூ சின்னம் வலிக்க தொடங்குகிறது. அது பற்றி தெரிந்துகொள்வதற்காக டாட்டூ கலைஞர் ரம்யாவை சந்திக்கிறார். எந்த ஒரு டாட்டூம் ஒரு ஆண்டுக்குப் பின்பு வலி இருக்காது என்கிறார். அப்போது, ஒரு உண்மையையும் சொல்கிறார். அந்த டாட்டூ ஒரு பெண்ணின் அஸ்தி கரைக்கப்பட்ட மையில் குத்தியது. அது தெரியாமல் நடந்தது என்கிறார்.

மறுநாள் டாப்ஸி தூங்கிக்கொண்டிருக்கிறார். திடிரென சத்தம் கேட்டு எழுகிறார். கமலாவை எழுப்புகிறார். அவர், எல்சிடி கேமரா பொறுத்தப்பட்ட கம்யூட்டர் மூலமாக முதல் வாசலை செக் செய்கிறார். காவலாளிக்கு அழைப்பு விடுக்கிறாள். அவரிடமும் பதில் இல்லை. கமலா வெளியே செல்கிறாள். அவரும் திரும்பவில்லை. டாப்ஸி வெளியே ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறார். கமலா தலையே இல்லாமல் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறார். டாப்ஸி பயத்தில் வீட்டுக்குள் முடங்கி, காவல்துறைக்கு அழைப்பு விடுத்து திரும்புகிறாள், முகமூடி அணிந்த அந்த கொலைகாரன் கையில் வாளுடன் இருக்கிறான். வேகமாக டாப்ஸியின் கழுத்தை கொய்து விடுகிறான். திடீரென சத்தத்துடன் படுக்கையில் இருந்து எழுகிறாள். நடந்தது முழுவதும் கனவு. பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்துவதற்குள், கனவில் பார்த்தது மாதிரியே ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கிறது. அதில் இருந்து டாப்ஸி தப்பித்தாளா? என்பது மீதி கதை.
femina

டாப்ஸி நடிப்பில் அதகளபடுத்துகிறார். படம் முழுவதும் சோலோவாக நடித்து கொடிகட்டி பறக்கிறார். குறிப்பாக, இருட்டு அறையில் அவர் தவிக்கும் தவிப்பில் நமக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் சஞ்சனா தன்னுடைய இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். டாப்ஸிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வினோதினி( கமலா) அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஆங்கர் ரம்யா கதை திருப்பத்துக்கு உதவுகிறார்.

மாயா படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வின் சரவணன் முதல் பாதியில் எதையோ நோக்கி கதையை நகர்த்துவதுபோல் காட்டிக்கொள்கிறார். ஆனால், பின் பாதியில் ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து படத்தை முடித்து விடுகிறார். இந்த இடத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார்? என்பதை ரசிகன் புரிந்துகொள்வது கடினம். ஆனால், ஒவ்வொரு ரசிகனும் ஒரு கோணத்தில் புரிந்துகொள்வான் என்பது மட்டுமே நிஜம். இன்னொரு செய்தி, உலக புகழ் இயக்குநர் ஆல்ப்பிரட் ஹிட்ச்ஹாக்கின் ‘ரியர் விண்டோ’ படத்தின் பாதிப்பில் எடுத்ததாக தெரிகிறது.