*உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கை தான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்த மானதாகி விடும் என்பது சாஸ்திர நம்பிக்கை.*

 *எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.*

 *இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும் தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித  நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீர் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவர அறிக்கையில், உத்தரப்பிரதேசம்-மேற்குவங்கம் வழியாக செல்லும் கங்கை நதி நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ ஏற்றதல்ல. 86 கண்காணிப்பு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 7 இடங்களில் உள்ள நீர் மட்டுமே பயன்பாட்டிற்கு ஏற்றது. மீதமுள்ள 78 இடங்களில் உள்ள நீரில் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களே அதிகம் உள்ளன. இதே போன்று நாடு முழுவதும் கங்கை நதி பாயும் 62 இடங்க ளில் நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 18 இடங்கள் மட்டுமே குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளன. உத்தர காண்டின் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் மேற்குவங்கத்தின் 2 இடங்களில் மட்டும் கங்கை நீர் சுத்தம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.

ஆனால், மற்றவை பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. வங்கக்கடலில் கங்கை நீர் கலக்கும் இடம் வரை பல இடங்களில் கழிநீரே அதிகம் உள்ளது. குளிப்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்ட இடங்களில் கோமதி நதி, கான்பூர், வாரணாசியின் கோலா கட், ரேபரேலி, அலகாபாத் திரிவேணி சங்கமம், மேற்குவங்கத்தின் அவுரா-சிவ்புர், பாட்னா, பகல்புர் உள்ளிட்டவைகளும் அடங்கும். அதே சமயம் கங்கை நீர் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு பயன்பாட்டிற்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கங்கோத்ரி, ருத்ரபிரயாக், ரிஷிகேஷ், தேவ்பிரயாக் உள்ளிட்டவைகளும் அடங்கும். கங்கை நதி பாயும் பகுதிகள் பலவற்றின் கரையோரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற் சாலைகள் உள்ளதால், அங்கிருந்து கழிவுநீர் கங்கை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வரைபடத்தில், ஆற்றில் மிக அதிகமாக கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!