வங்கிகளில் பெருந்தொகை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத பெரும் கடனாளிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுங்கள் என்று ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ), மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நூடன் தாக்கூரின் கோரிக்கை மீது மத்திய தகவல் ஆணையர் சுரேஷ் சந்திரா இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, கடந்த 2017-ல், ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியபோது, பெருந்தொகை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத சிலரது வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் தீர்வுக்காக வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பேசியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நூடன் தாக்கூர் மனு தாக்கல் செய்தார்.

வாராக் கடன்கள் என்று வகைப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலம் கடந்த பிறகும் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லாத, நீண்ட காலமாக திருப்பிச் செலுத்தப்படாத, பெரும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆரம்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று உள் ஆலோசனைக் குழு (ஐஏசி) பரிந்துரை செய்திருக்கிறது என்று ஆர்பிஐ துணை கவர்னர் விரல் ஆச்சார்யா அந்த சொற்பொழிவில் பேசியிருந்தார்.

அதன்படி, மொத்த வாராக் கடனில் (என்பிஏ) ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிற, 12 மிகப்பெரும் கடன் கணக்குகளுக்கு எதிராக திவால் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த சொற்பொழிவிலும், குறிப்புத் தாள்கள் பதிவேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள, திருப்பிச் செலுத்தாத பெரும் கடன்காரர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்புவதாக நூடன் தாக்கூர் தனது ஆர்டிஐ மனுவில் கோரியிருந்தார்.

ஆனால் இவை `ரகசியத் தகவல்’ என்று கூறி விவரங்களைத் தெரிவிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்துதான் நூடன் தாக்கூர் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.

error: Content is protected !!