பார்லிமென்ட் தேர்தல் ; 6-ஆவது கட்டமாக நடந்த வாக்குப் பதிவு விபரம்!

பார்லிமென்ட் தேர்தல் ; 6-ஆவது கட்டமாக நடந்த வாக்குப் பதிவு விபரம்!

பார்லிமென்ட்டின் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 5 கட்டத் தேர்தல்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன. இந்நிலையில், 6-ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ஹரியாணா (10), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), மேற்கு வங்கம் (8), தில்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இவர்களில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். அதிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோர் டெல்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

நேற்றைய தேர்தலில் மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இருப்பினும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர். இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 4 மணி நேரத்தில் 37 சதவீத வாக்குகள் பதிவாகின. “கேஷ்பூரில் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்’ என்று மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்தது. பாஜக பெண் வேட்பாளர் பாரதி கோஷ் சென்ற வாகனம் மீது வெடி குண்டு வீசியும், கற்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் அந்த மாநிலத் தலைவருமான திலீப் கோஷும் வாக்குச் சாவடிக்கு செல்ல முயன்றபோது பிரச்னைகளை எதிர்கொண்டார்.

ஹரியானா மாநிலம், சோனிபட் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் திக்விஜய் சௌதாலா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் சரியாகத் தெரியவில்லை என்று புகார் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, அவற்றை மாற்றியதாக அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பீகார் மாநிலம், ஷியோஹர் மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரியை துணை ராணுவப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிகாரிலும் சில வாக்குச்சாவடி களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. அவை சரிசெய்யப்பட்ட பின்னர், வாக்குப் பதிவு தொடங்கியது. 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்தம்  59 தொகுதிகளிலும்  காலை 7:00 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெற்றது.

7 மாநிலங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வருமாறு:

பீகார் – 59.29%,

அரியானா – 62.91 %,

மத்தியப் பிரதேசம் – 60.40 %,

உத்தரப் பிரதேசம் – 53.37 %,

மேற்கு வங்காளம்- 80.16%,

ஜார்க்கண்ட் – 64.46 %,

டெல்லி – 56.08 %.

டெல்லியில் பல இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.

ஓட்டுப்பதிவு நடந்தaadi 7 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அடிசினல் ரிப்போர்ட்

இதற்கு முன்பு நடைபெற்ற 5 கட்ட தேர்தல்களில் ஒவ்வொரு கட்டத்திலும் பதிவான வாக்குகள் வருமாறு:

முதல் கட்டத்தில் 69.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன

2-வது கட்டத்தில் 69.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன

3-வது கட்டத்தில் 68.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன

4-வது கட்டத்தில் 65.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன

5-வது கட்டத்தில் 64.16 வாக்குகள் பதிவாகியிருந்தன.

Related Posts

error: Content is protected !!