ஜூனியர் விகடன் மீது 100கோடி நட்ட ஈடு கேட்டு போடப்பட்டிருக்கும் வழக்கு!?

ஜூனியர் விகடன் மீது 100கோடி நட்ட ஈடு கேட்டு போடப்பட்டிருக்கும் வழக்கு!?

ஜூனியர் விகடன் திமுக தலைவர் .முக.ஸ்டாலின் பற்றி எழுதியிருப்பதை இன்று நேற்றா செய் கிறார்கள். காலம்காலமாக திமுகவுக்கு எதிரான ஆயுதம் என்றால் அது பொய்யும், புரளியும், வதந்தியும், “சொன்னதாகச் சொன்னார்கள், கேட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்….” போன்ற பொய்ச்செய்திகளும்தான்.

அந்தக் காலத்தில் காங்கிரஸ், பிறகு அதிமுக, பாஜக, நாதக, மநிம,- எப்போதும் பார்ப்பனர்கள் எனப் பயன்படுத்தும் இந்த ஆயுதம் மிகவும் பழமையானது. போகிற போக்கில் ஒரு பொய்யைச் சொல்வார்கள். அது என்ன, ஏது என திமுககாரன் எல்லாமே திணறிப்போவான். அவன் அதற்கு ஆதாரம் தேடி, எடுத்து நிரூபிப்பதற்குள் அடுத்த பொய்யைத் தூக்கி எறிவார்கள்.

பெரியார் மீது பார்ப்பனர்களும், பார்ப்பனர்களிடம் வாங்கித்தின்னும் பார்ப்பன அடிமைகளும் கூட இதே ஆயுதத்தைதான் பயன்படுத்துவார்கள்.

சிலசமயம் நமது நல்ல குணங்களே நமக்கு எதிரியாக அமைவதுண்டு. மிகவும் அன்புகொண்டவர் களால் சுயநலமாகச் சிந்திக்க முடியாது. பிறர் காயப்படுவார்களோ என மிகவும் யோசிப்பவர்கள் எப்போதும் காயப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுபோல கலைஞரின் அதீத ஜனநாயகப் பண்பும், இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத அவருடைய பெருந்தன்மையும் கூட இந்தப் பொய்கள் உயிருடன் இருக்க ஒரு காரணம். ஏனெனில் மிகமிகமிக அரிதாகவே திமுக சார்பில் அவதூறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இப்படித்தான் விஞ்ஞானபூர்வ ஊழல், ஆசியாவிலேயே பணக்கார குடும்பம், திருட்டு ரயில் என்றெல்லாம் திமுக மீதான பொய்கள் வகைதொகை இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப ‘மேனுஃபேக்சர்’ செய்யப்பட்டுச் சுற்றுகிறது. காரணகாரியமே இல்லாமல், எந்த ஆதாரமுமே இல்லாமல் சிலர் திமுக மீது வெறுப்புணர்ச்சியோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்குக் காரணம் சிறுவயதில் இருந்தே இப்படியான பொய்களுக்கும், வாய்க்கதைகளுக்கும் பலியாகிப் போனதுதான்.

இணையத்தில் எம்.எம்.அப்துல்லா, கொக்கரக்கோ செளமியன், கிளிமூக்கு அரக்கன், ஏஜண்ட் அகண்டமுத்து, முனியாண்டி ஐயங்கார் எனப் பலர் பொய்களைக் காணாமல் செய்யும் பல உண்மைகளை எழுதினாலும் காலம்காலமாக ஊறிப்போன அந்த ‘belief system’த்தை உடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது. ராமாயணக்கதை கேட்டு ஊறிப் போனவர்களை ராவணன் நல்லவன் என நம்ப வைப்பதைப் போல!

இதை இனியும் அனுமதித்துக் கொண்டிருப்பது ஆகாது. ஏற்கனவே புனையப்பட்ட கதைகளை எல்லாம் கதை என நிரூபிக்கும் அதேநேரம், ‘நன்றாக வாங்கித் தின்ற’ ஆடு, புளுக்கை போட்டுக் கொண்டே ரோட்டில் நடப்பதைப் போல சில ஊடகங்கள் பரப்பும் பொய்களையும் வழக்குகளின் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

ஜூனியர் விகடன் மீது 100கோடி நட்ட ஈடு கேட்டு போடப்பட்டிருக்கும் இந்த வழக்கு பொய் பரப்புகின்றவர்களை வெறுமனே பயமுறுத்துவதற்காக மட்டுமல்லாமல், இனி பொய் பரப்புகின்றவர்கள் மீதும் தீவிரமாகத் தொடரப்பட வேண்டும்.

இதை திமுகவின், பெரியாரிய இயக்கங்களின் நலனுக்காக மட்டும் சொல்லவில்லை. இப்படியான கட்டுக்கதைகளினால் திராவிட இயக்கத்தின் மீது ஒவ்வாமைகொண்டு ஆமைக்கறி, ஏகே57, பலாமரக் குப்பைளைக் கேட்டும், திரைத்துறையில் நலிந்தவர்களைக் காப்பாற்றவே வக்கில்லாமல் இன்று நாட்டை காப்பாற்றக் கிளம்பியிருக்கும் நடிகர்களையும் நம்பியும் நாசமாகப் போய்க் கொண்டிருக்கும் பல இளைஞர்களைக் காப்பாற்றவும்தான் சொல்கிறேன்.

-டான் அசோக்

error: Content is protected !!