பிளஸ் 1 ரிசல்ட் வந்துடுச்சு ; ஈரோடு முதலிடம்!

தமிழ்நாட்டில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது. www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்நிலையில் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.