வாக்குப் பதிவை காலை 5 மணிக்கே தொடங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மண்டையை பிளக்கும் வெயில் உக்கிரம் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக இனி நடக்கவிருக்கும் மூன்று கட்ட வாக்குப்பதிவை காலை 5 மணிக்கே துவங்க வேண்டும் என்று தாக்கலான மனுக்கள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் தொடங்கவிருப்பதாலும் பல மாநிலங்களில் அனல் காற்று வீசுவதாலும் தேர்தலுக்கான வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக அதிகாலை 5 மணிக்கு தொடங்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் முகமது நிசாமுதின் பாஷா மற்றும் ஆசாத் ஹயத் ஆகியோர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். ரமலான் தொழுகை மாதம் தொடங்கவிருப்பதால் காலை 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவது சாதகமாக இருக்கும். மேலும் வெப்பம் அதிகரித்து வருவதால் மதியத்துக்குப் பிறகு மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏப்ரல் 29ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை அவசரமாக விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இன்று மனு மீதான விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொள்ளும்படி நீதிபதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து வாக்குப்பதிவு நேரத்தை மாற்றலாமா ? என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இறுதியில் மக்களவை தேர்தலில் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவின் நேரத்தை காலை 5 மணிக்கு மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.