தமிழக நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய பகுதிகளில் மொத்தம் 3,600 நீர்நிலைகள் இருக்கின்றன. அதில் 20 – 30 நீர்நிலைகளைக் குடிநீருக்குப் பயன்படக்கூடியவையாக மாற்றினாலே சென்னை யைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஓரளவிற்குத் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணலாம். காவேரி டெல்டா பகுதிகளில் நீர் நிலையங்களைத் தூர்வாரினால் கடைமடை வரை நீர் செல்லும் வாய்ப்பிருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்க நாம் ஐந்து விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். கழிவு நீரை நீர் நிலைக்குள் வர விடாமல் தடுப்பது, கட்டுமானக் கழிவுகளை உள்ளே கொட்டாமல் தடுப்பது, நீர் நிலைகளைத் தொடர்ந்து பராமரிப்பது, நீர் நிலைகளில் குப்பைகளைப் போடுவதைத் தடுப்பது, ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது. இதைப் பல பகுதிகளில் செயல்படுத்தினாலே தண்ணீர் பிரச்சினை தீரும். ஆனால் அதை செய்வதற்கான எண்ணம் இரு கட்சிகளுக்குமே இல்லை. நீர் நிலைகளை ஆக்கிரமித்து அதில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து பெரும் லாபம் அடைந்தவர் கள் இந்த இரு பெரும் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகள்”  என்றெல்லாம் சிலர் உரத்தக் குரலில் சொல்லி வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்  ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில் களில்தான் நீரை பார்க்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வழக்கு ஒன்றில் தெரிவித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும். அரசு, இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதில், வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்த கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வருவாய் துறை ஆவணங்களில் ஏரிபுறம்போக்கு என கூறப்படும் நிலங்களை பயன்படுத்தி, ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்பு பகுதிகளை விரிவு படுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதை தடுக்க முடியும் எனவும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்கு காரணமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

இந்த வழக்கில் பொதுபணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பாக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில் 4161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி 6.18 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளதோடு, அடையாறு நதிக் கரை 50 லட்சம் செலவில் பலப்படுத்த பட்டுள்ளதாகவும், இதே போல 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் ந்பட்டது, அதே போல, சென்னையில் உள்ள ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை பாதுகாக்க 100 கோடி ரூபாய் செலவில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழி தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங் களுக்குள் அளவீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கடமை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து, நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், முன்னோர் ஆறு குளம் ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் (capsule) தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக் கூடும் என வேதனை தெரிவித்தனர். மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், இயற்கையின் வர பிரசாதமான நீரை வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப் டவுன் நகருக்கு ஏற்பட்டதை போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

இதே போல மற்றொரு வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அடையாளம் காண சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.