என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர மே மாதம் 2 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ் நாட்டில் என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது.

நம் நாட்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் இங்குள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்த முடிவு செய்து இருப்பது அண்மையில் தெரிய வந்திருக்கிறது. இவற்றில் ஒரு கல்லூரி மட்டும் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
மீதமுள்ள 17 கல்லூரிகள், கால அவகாசம் முடிந்த பிறகும் எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் 2019-20 கல்வியாண்டில் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்றனர் பல்கலைக்கழக அதிகாரிகள்.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது. உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 2 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி கடைசி நாள். ஜூன் 3-ம்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் ஜூன் 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்கும் இணையதளம் முகவரி நாளை அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.