ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. பேய் படம் ஆனால் குழந்தை முதல் பெரியவர் வரை பயமின்றி சிரித்து ரசிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பில் உருவாகியிருந்த முனி படத்தின் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு காஞ்சனா வெளியானது.

வறுமைப் பேய் குடியிருந்த திரையரங்குகளில் காஞ்சனா குடியேறியதும் அந்தப் பேய் விரட்டியடிக்கப்பட்டது என்று தியேட்டர் உரிமையாளர்கள் நகைச்சுவையாகக் கூறினார்கள். அதன் பின் தமிழ் சினிமாவில் ‘காஞ்சனா’ என்பது பிராண்டாக மாறிவிட்டது, அதனால்தான் காஞ்சனா மூன்றாவது பாகம் வரை வெளியாக முடிந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் நடித்த படங்கள் எப்போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் முதல் நாள் கோடிகளில் வசூல் கணக்கு இருக்கும். அந்தப் பட்டியலில் காஞ்சனா என்ற பெயரும் இணைந்திருக்கிறது.

தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் காஞ்சனா – 3 திரையிடப்பட்டிருக்கிறது. காலை 8 மணி காட்சிக்கு தியேட்டர்களில் பெரும்பாலும் அப்படத்தின் நாயகனின் ரசிகர் கூட்டம் தான் நிரம்பி வழியும். முதல் மூன்று நாட்களுக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வெகுஜன மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள். இதனை காஞ்சனா – 3 முறியடித்திருக்கிறது. நேற்றைய தினம் காலை 8 மணி காட்சிக்கு முக்கிய நகரங்கள் அனைத்திலும் குழுந்தைகள் தங்கள் பெற்றோருடன் காஞ்சனா – 3 படம் பார்க்கக் குவிந்தனர்.

காஞ்சனா திரைப்படத்தின் திரைக்கதை, உள்ளடக்கம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தியேட்டர் வசூலில் காஞ்சனா கம்பீரம் குறையாமல் முதல் நாள் சுமார் 10.28 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.