குட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை? ஐகோர்ட் டவுட்!

2013 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் புகையிலை, குட்கா பொருட்களுக்கு தடைகளை விதித்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்குமுறையால் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில். இந்த  குட்கா, பான்மசாலா போன்ற பொருள்களை தமிழ்நாட்டில் விற்க நிரந்தர தடை விதிக்காதது ஏன் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குடிநோயைப் போலவே புகையிலை சார்ந்த எந்த ஒரு பழக்கமும் தீவிர நோயே. அதனால்தான் மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. இந்த மெல்லும் புகையிலை நோயில் மூன்று நிலை உண்டு. சிலர் நன்றாக மென்று சில நிமிடங்களில் துப்பி விடுவார்கள். இவர்கள் முதல் நிலை. எளிதாக மீளலாம். அடுத்தது, வாயில் எங்காவது அதக்கிக்கொள்வது. நிமிடங்களில் தொடங்கி மணிக்கணக்கில் அதக்கிக்கொள்பவர்கள் எல்லாம் உண்டு. இவர்கள் இரண்டாம் நிலை. கொஞ்சம் கஷ்டம் என்றாலும் விடுபடலாம். அடுத்தது, பான் பராக் ஆகட்டும்… மெல்லும் புகையிலை ஆகட்டும்… சகட்டுமேனிக்கு கடித்து மென்று விழுங்கி விடுவது. சாப்பாட்டை விட அதிகம் இவர்கள் உட்கொள்வது புகையிலை சமாச்சாரங்களைத்தான்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களுக்கு ஆண்டுதோறும் தடையை நீட்டித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை, புதிய அரசாணை வெளியிடுவதற்கு பதில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு – “ அட.. ஆமாங்கறோம்.,குட்கா, பான்மசாலா போன்ற பொருள்களை விற்பதற்கு நிரந்தரமாக தடை விதிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து அரசாணை வெளியிடுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

தமிழக தலைமை செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.