பார்டரைத் தாண்டிப் பேசறாங்க – அரசியல்வாதிகள் பரப்புரைக் குறித்து எக்ஸ் சர்வீஸ்மேன்கள் புகார்!

நடக்க இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய அரசியல்வாதிகள் நாட்டைக் காக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினரின் செயல்களை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் எனக்கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு 150க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

நம் நாட்டில் பார்லிமெண்ட் தேர்தல் நடைபெற்று வருவதால், அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர்மீது ஒருவர் சரமாரியாக சாடிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், செய்யப்படுவதை வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ராணுவ வீரர்களின் செயல்களையும் பெயரையும் பயன்படுத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,‘‘பாலக்கோட் தாக்குதலில்  நரேந்திர மோடியின் ராணுவப்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி திரும்பியது. இந்திய ராணுவம் மோடியின் சேனை” என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதேபோல், மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள், பாலக்கோட் தாக்குதல் நடத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசி இருந்தார். இதற்கு பல தரப்பினரிடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரித்து வருகிறது.

மேலும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஊர்மிளா ஆகியோர் விமானப்படை வீரர் அபிநந்தனின் புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினர்.இதனால், ராணுவத்தினரின் செயல் களை அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதை கண்டு வருந்தி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த கடிதத்தில்,” ராணுவத்தின் பெயர்கள், ராணுவத்தின் சீருடைகள், அடையாளங்கள், எந்தவிதமான செயல்கள், ராணுவ வீரர்கள் ஆகியவற்றை அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பெருமை கோரியும், அதற்கு தாங்களே காரணம் என்றும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ராணுவ வீரர்கள் மோடியின் சேனை என்றும் குறிப்பிடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

இதுபோன்று அரசியல்வாதிகளின் செயல்கள், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீராங்கனைகளின் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால், மதச்சார்பற்று, அரசியல்சார்பற்று தேசத்துக்காக பணியாற்றிவரும் ராணுவ வீரர்களின் செயல்களை பாதுகாக்க வேண்டும். இதை தடுக்க உரிய நடவடிக்கைகளை குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் என தாழ்வுடன் கேட்கிறோம்” என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த கடிதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி எஸ்.எப் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, ஜெனரல் தீபக் கபூர், விமானப்படை மார்ஷல் என்.சி. சூரி. கப்பற்படை முன்னாள் தளபதி லக்ஷ்மி நாராயண் ராம்தாஸ், விஷ்ணு பகவத், அட்மிரல் அருண் பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவர் மாளிகைக்கு இத்தகைய கடிதம் எதுவும் வரவில்லை என்று மறுப்பு வெளியாகி உள்ளது. கையெழுத்திட்டதாக கூறப்படும் முன்னாள் உயர்நிலை ராணுவ அதிகாரிகள் சிலரும் இதில் கையெழுத்திடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிலர் இக்கருத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் ஆணையத்திடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில்,”பாஜகவினரும் மோடியும் நம் வீரமிக்க வீரர்களின் செயல்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். அதைக்கண்டு வருந்தி முன்னாள் ராணுவ வீரர்களும், முன்னாள் தளபதிகளும் ஒன்று சேர்ந்து வந்து குடியரசு தலைவரிடம் புகார் கொடுத்துள்ளனர். அத்தகைய நிலையில் நம் நாடு உள்ளது. பாஜக இதனை திருத்திக்கொள்ளாது. நியாயமான தேர்தல்களை நடத்த ஆளும் கட்சி மீது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.