December 1, 2021

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி இன்று தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள மக்களவை தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர். இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,”தெற்கு மாநில மக்கள் மீது ராகுல் காந்தி வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதைக்கு சான்றாக இது அமைந்துள்ளது. ராகுல் காந்தியின் கர்ம பூமி அமேதி, ஆகையால் அந்த இடத்தை அவர் என்றும் விட்டுக்கொடுக்கமாட்டார். எனினும், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தெற்கு மாநில காங்கிரஸினர் தெற்கு இந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிடவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆகையால், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தார்” என்று கூறினார்.