வேட்பாளர்களின் கிரிமினல் வழக்கு விபரம்! – சுப்ரீம் கோர்ட் காட்டம்!

கடந்த 2014ல் நடந்த தேர்தல் மூலமாக  கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட 186 நபர்களை    பாராளு மன்ற உறுப்பினர்களாக நம் மக்கள் தேர்வு செய்திருந்த நிலையில்  இந்த 2019ல் போட்டியிடும்  வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து பத்திரிகை களில் செயதி வெளியிட வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டே உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் தேர்தல் நடை முறை விதிமுறைகளில் சேர்க்கவில்லை. அதனால் உத்தரவு அமல் செய்யப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதற்கு விளக்கமளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வழக்கு விசாரணயின் போது, , சிறை தண்டனை அனுபவித்த வர்கள், கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற அதிதீவிர குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, தங்கள் மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பான விவரங்களை செய்திதாள், செய்தி சேனல்கள் மற்றும் ஆன்லைன் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஆக்டோபர் 10ம் தேதி அறிக்கை அனுப்பியது. இந்நிலையில் அரசியல் சாசன அமர்வு அளித்த உத்தரவை தேர்தல் ஆணையம் முறையாக பின்பற்றவில்லை என்று வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபத்யாய சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வேட்பாளர்கள் தங்கள் கிரிமினல் வழக்குகளை பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டும் என்பதை தேர்தல் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் சேர்க்கவில்லை. அதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாரும் பின்பற்றவில்லை.

மேலும் தேர்தல் ஆணையம் அறிவித்த விதிமுறைகளில் எந்தெந்த செய்திதாள்கள், செய்தி சேனல்களில் வேட்பாளர்கள் தங்கள் கிரிமினல் வழக்குகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும். செய்தி சேனல்களில் எந்த நேரத்தில் வேட்பாளர்களின் கிரிமினல் குற்றங்கள் பற்றி செய்தி வர வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவில்லை.

அதன் காரணமாக சட்டமன்ற தேர்தல்களின் போது மக்களிடையே அதிகம் பிரபலமடையாத சாதாரண செய்திதாள்களில் பல வேட்பாளர்கள் வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளனர். மக்கள் செய்திகளை பார்க்காத நேரங்களில் வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் குறித்து செய்தி வெளியானது.

வேட்பாளர்களின் இந்த செயல்பாடுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி விதிமுறைகளை அமல்படுத்தாத தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபத்யாய தன் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று  நீதிபதிகள் ஆர். எஃப் நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது மிகவும் முக்கியமான விவகாரம், இது குறித்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று குறிப்பிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தாதது குறித்து மூன்று துணை தேர்தல் ஆணையர்கள், சட்ட செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.