எம். என். என்றழைக்கப்பட்ட ம. நடராசன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எம்மென். என்ற இரட்டை எழுத்தால் அழைக்கப்பட்ட நடராசன் மறைந்த நாளின்று. கடந்த முப்பதாண்டு கால தமிழக அரசியலில் சதுரங்கம் ஆடிய புதிய பார்வை ஆசிரியர் என்ற போர்வையில் தமிழ் இலக்கியத்துக்கு தனிச் சேவை ஆற்றிய நடராசனை சசிகலாவின் கணவர் என்ற ஒற்றை வார்த்தை மூலம் சொல்லி முடித்து விடும் போக்கு நிலவுகிறது.

சட்டமன்றம் அல்லது பாராளுமன்ற உறுப்பினராகி நேரடி அரசியல்வாதியாகி இருக்க வேண்டியவர், ஆனால் அரசாங்கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக ஆகி நிழல் அரசியல் அரசியல்வாதியானவரிவர். தஞ்சையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் கிராமத்தில் மருதப்பன் என்ற சிறு விவசாயிக்கு 1942ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி மகனாகப் பிறந்தார் நடராஜன். இவர் கல்லூரியில் படிக்கும் போதே அரசியல் அரங்கிற்கு வந்து விட்டார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவரான நடராஜன் 1960களின் மத்தியில் தமிழகத்தின் பெரும்பான்மையான மாணவர்களுக்கு விழுப்புண்களை ஏற்படுத்திய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் திமுகவின் மாணவர் பிரிவான திராவிட மாணவர் அணியில் ஆர்வத்துடன் பங்கெடுத்த நடராஜன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிகக் கடுமையாக மாநில அரசாங்கம் ஒடுக்கத் தொடங்கிய போது போராட்ட ஏற்பாடுகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியப் பங்காற்றியவர் நடராஜன்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர் 1967ல் நடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது.

அதை அடுத்து நடராஜன் முதலில் நேரடி அரசியலில் இறங்கவே விரும்பினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமானவராக இருந்து திமுகவில் ஒரு தலைவராக வளர்ந்து கொண்டிருந்த எல்.கணேசன் மூலமாக 1971ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட முயற்சி செய்தார் நடராஜன்.

ஆனால் நடராஜனின் குடும்ப சூழ்நிலையை சுட்டிக்காட்டிய கணேசன் வேறொரு யோசனை சொன்னார். சட்டமன்ற உறுப்பினராவதை விட அரசு அதிகாரியாக பதவி வாங்கித் தருவதாகச் சொன்னார் கணேசன். நடராஜனும் அதை ஏற்றுக் கொண்டார்.

1971ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஏ.பி.ஆர்.ஓ பணியிடங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் படி தமிழக அரசின் ஏ.பி.ஆர்.ஓவாக நியமிக்கப்பட்டார் நடராஜன்.

1975ம் ஆண்டு நடராஜனுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவிற்கு தலைமை தாங்கியவர் தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் மன்னை நாராயணசாமி. திருமணத்தை நடத்தி வைத்தவர் திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான கருணாநிதி.

எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரான பின்னர் ஜெயலலிதாவை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சிகள் செய்தார். அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்திரலேகாவைப் பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள் குறித்த தகவல்களை அவருக்கு பயிற்றுவித்தார். அதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா சென்னைக்கு மாற்றப்பட்டார். சந்திரலேகாவின் மக்கள் தொடர்பு அதிகாரியான நடராஜனும் சென்னைக்கு மாற்றலாகி வந்தார். இப்படித்தான் ஜெயலலிதாவிற்கு அறிமுகமானார் நடராசன்.

ஜெயலலிதாவிற்கு வீடியோ கேசட் கொடுக்கப் போய் அவருடன் நெருக்கமானார். 1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்த போது ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக திகழ்ந்தார் நடராஜன். 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது போன்ற அரசியல் நகர்வுகளில் நடராஜனின் பங்கு முக்கியமானது.

தொடர்ச்சியான சில நிகழ்வுகளால் நடராஜனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இடைவெளி அதிகம்

ஆனது. என்றாலும் சசிகலா ஜெயலலிதாவுடன் இணைந்தே இருந்தார்.

நடராசன் தமிழ் உணர்வாளராக அறியப்பட்டவர். 2004ம் ஆண்டு முதல் புதிய பார்வை என்ற இதழை நடத்தி வந்தார் நடராஜன்.தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, புலிகளுக்கு வலு சேர்த்தவர். இலங்கை இனப்படுகொலை நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்தார். அது அதிமுக அரசால் அகற்றப்பட்டது.

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் சொகுசுக் கார் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது.

அரசியல் சாணக்யன் என்று ராஜீவ்காந்தியால் பாராட்டப்பட்டவராக்கும் இந்த நடராசன்