October 25, 2021

நாற்பதுக்கு நாற்பது, பதினெட்டுக்கு பதினெட்டு என 100 சதவீத வெற்றி!- ஸ்டாலின் விருப்பம்!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாமல் தி.மு.க. சந்திக்கிற முதல் தேர்தல் களம் என்பது அவரது தொண்டர்களான உங்களுக்கு மட்டுமல்ல, உங்களில் ஒருவனான எனக்கும் பெரும் சுமைதான். ஆனாலும் நமக்கு எதிராக நிற்கும் பாசிச சக்திக்கும் அதற்குத் துணை போகும் அடிமை மனநிலை கொண்டோருக்கும் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டிடும் வகையில் நம்முடைய களப்பணி அமைந்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கலைஞர் பாணியில் தொண்டர்களுக்கு அனுப்பும் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களப்பணி தொடங்கி விட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இனி நமது ஒற்றை இலக்கு, மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வதைக்கிற பாசிச-மதவெறி- ஊழல் மய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவது ஒன்று தான்.

எளிமையாக சொல்வதென்றால், தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டமன்ற தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமையாக வெற்றிபெற உழைப்பது ஒன்றே நமது இலக்கு.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாமல் தி.மு.க. சந்திக்கிற முதல் தேர்தல் களம் என்பது அவரது தொண்டர்களான உங்களுக்கு மட்டுமல்ல, உங்களில் ஒருவனான எனக்கும் பெரும் சுமைதான். அந்த சுமையை எளிதாக சுமக்கும் ஆற்றலையும், பயிற்சியையும் நமக்கு வழங்கியவரே கருணாநிதி தான்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் எந்த சின்னமாக இருந்தாலும் கருணாநிதியின் தொண்டர்களாகி உங்களுக்கு அது உதயசூரியனாகத்தான் தெரியும்; தெரிந்திட வேண்டும். அதனை மனதில் கொண்டு, கட்சியின் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் களப்பணியாற்றி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவதே நமக்கான இலக்காகும்.

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்தை மார்ச் 20-ல் (நாளை) தொடங்குகிறேன். வெற்றிக்கு கட்டியம் கூறும் திருவாரூர் தொகுதியில் தொடங்குகிற பரப்புரைப் பயணம், 40 நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியையும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.

கருணாநிதி காலத்தில் இருந்தே கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் களத்தின் போக்கை தீர்மானிக்கும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் விளங்கும். இப்போதும் அப்படித்தான். நம்முடைய தேர்தல் அறிக்கை ஒரு போதும் வில்லனாக இருந்ததில்லை. மக்களின் வில்லன்களை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கொண்ட ஆயுதமாக இருக்கும். அந்த ஆயுதத்தை வழங்கிவிட்டு, பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பது, பதினெட்டுக்கு பதினெட்டு என 100 சதவீத வெற்றியன்றி வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் உழைத்திடுவீர். அந்த உழைப்பு தரப்போகும் மகத்தான வெற்றியை மே 23-ந் தேதி தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கிடுவோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.