October 16, 2021

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரிய வந்துள்ளது.

வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 48 வயதாகும் நிரவ் மோடியை கைது செய்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பும்படி பிரிட்டன் அரசுக்கு இந்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

லண்டன் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி நிறுவனம் இந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது.

தனது வீட்டிலிருந்து வியாபாரம் செய்யும் இடத்திற்கு தினமும் நாயுடன் நடைபயிற்சி செய்கிறார் நிரவ் மோடி. அவர் நெருப்புக் கோழி தோலால் தயாரிக்கப்பட்ட மேல் சட்டையை அணிந்துள்ளார், அந்தச் சட்டையின் விலை 10,000 பவுண்டுகள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வாழ்ந்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவங்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு , தனது சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு வாக்கிங் சென்று வருகிறார்.

பிரிட்டனில் தேசிய இன்ஷ்யூரன்ஸ் எண் அவர் பெயரில் வாங்கியுள்ளார். அந்த எண் இருப்பதால் அவர் பிரிட்டனில் தொழிலாளியாக வேலை செய்யலாம். வியாபாரம் செய்யலாம். வங்கிகளில் கணக்கு வைத்துக கொண்டு அவற்றை வர்த்தகத்துக்கு பயனபடுத்தலாம். தான் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருப்பதாக இந்தியாவும், பிற நாடுகளின் உளவுத்துறை தகவல்களும் கூறி வரும் நிலையில், சற்று குண்டான தோற்றத்துடன், மீசை வைத்துக்கொண்டு லண்டனில் நிரவ் மோடி வலம் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.