October 21, 2021

நம்ம ரயில்வேயில் வட இந்தியர்கள்தான் அதிகமா வேலைக்கு சேருகிறாங்களா?

மதிப்பெண்களில் முறைகேடு செய்து வட இந்தியர்கள் ரயில்வே வேலைக்கு வருகிறார்கள் என்று ஒரு பிராது வைக்கப் படுகிறது. அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராயாமல் எல்லோருமே அவரவர் பங்குக்கு பொங்கல் வைக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் இப்படி தான் தகவல் அறியும் சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல் என்று தயிர் ஒரு டப்பா ஆயிரம் ரூபாய்க்கு சற்றே ஏறக்குறைய விலையில் ரயில்வே கேன்டீனில் வாங்கப்படுகிறது என்று யாரோ கிளப்பி விட அதன் உண்மைத்தன்மை பற்றிய எந்த கேள்வியையும் கேட்காமல் ஆளாளுக்கு பொங்கித் தீர்த்தார்கள்.

அப்பவே சொன்னேன், “கொஞ்சம் லாஜிக்கா யோசிங்கய்யா, தயிர் தண்ணியா கலப்படத்துடன் வாங்கப்படுகிறது என்று சொன்னால் கூட சந்தேகப்படலாம். ஆனால் பத்து ரூபாய் தயிர் ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் வாங்க முடியாது. ஆடிட்ல மாட்னா ஆப்படிச்சிடுவானுங்க”னு. யாருமே கேக்கலை. கடைசியில் நான் சொன்ன மாதிரி தான் ஆச்சி. இவனுங்க கிளப்பி விட்டதே புரளிங்கிறது பின்னால் தெரிஞ்சிப் போச்சி. அதுவரை பொங்குன போராளிகள்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல.

அதே மாதிரி தான் ரயில்வே ஊழியர்கள் அத்தனை பேரும் லஞ்சம் வாங்குறவனுங்க னு கிளப்பி விட்டானுங்க. அது மாதிரி போறவன் வர்றவான்லாம் ஆமா நான் கூட காசு கொடுத்துருக்கேன். ரயில்வே காரன் பூரா லஞ்சப் பேர்வழி னு ஷேர் பண்ணி சந்தோசப்பட்டானுங்க.

முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கனும். அரசு இயந்திரம் செயல்பட கணக்கில் அடங்காத பின் வேலைகளை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் நேரடியாக பொது மக்களுடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள். வெகு சொற்பமாக ஆயிரம் பேர் தான் நேரடி மக்கள் தொடர்பில் இருப்பார்கள். டிடிஆர், டிக்கெட் செக்கர், பார்சல் சர்வீஸ் ஸ்டாப், டிக்கெட் புக்கிங் கிளர்க் போன்றவர்கள் தான் மக்கள் தொடர்பாளர்கள். இவர்கள் பத்தாயிரம் பேர் இருப்பார்களா, அவர்களில் சரிபாதி தப்பு பண்றான்னே வச்சிக்குவோம்.

இதில் சம்பந்தப்படாத சிக்னல் ஆபரேட்டர்கள், ஓப்பன் லைன் டெக்னீசியன்கள், ஒர்க்சாப் டெக்னீசியன்கள், ட்ராக் மேன்கள், Junior Engineerகள், என லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து விட்டு அதற்கான சம்பளத்தை மட்டும் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

பொண்ணு பக்கத்துல இருந்தும் குஸ்திக்கு முயற்சி பண்ணாம இருக்கிறது தான் யோக்கியம்னா பொண்ணே இல்லாத ஊர்ல இருக்கிறவன் பரம யோக்கியனா தான் இருக்கனும் இல்லையா. எவனோ ஒருத்தன் தனியா பொண்ணு மாட்டியிருக்குனு கையப் புடிச்சி இழுத்தா எல்லோருமே சேர்ந்து பலாத்காரம் பண்ணிட்டானுங்க னு சொல்றதுக்கும் இதுக்கும் வித்தியாசமேயில்லை.

ஏதோ ஒரு டிடிஆர், ஒரு பார்சல் ஸ்டாப் லஞ்சம் வாங்கிட்டா சம்பந்தமேயில்லாமல் அத்தனை ஊழியர்கள் மீதும் சேற்றை வாறி அடிக்கிறது தான் நடந்துக்கிட்டு இருக்கு. அதே மாதிரி தான் இப்போ மோசடி செய்து வடஇந்தியர்கள் இங்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுவதும்.

எனக்கு கூட ஆட்சேபம் இருக்கிறது அளவில் அதிகமாக வெளி மாநிலத்தவர்கள் ரயில்வே வேலையில் தேர்வாகி இங்கு வருகிறார்கள் என. ஆனால் அவன் தேர்ச்சி பெற உரிய வேலையை செய்கிறான்.

செகந்திராபாத்தில், பாட்னாவில், ஜோத்பூரில் பெரிய பெரிய கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் ரயில்வே வேலைக்கென தயாராகும் மாணவர்களை பயிற்றுவிக்கின்றன. மாணவர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐடிஐயில் படித்து ரயில்வே பணி பயிற்சி நிலையங்களில் தங்கி மாசக்கணக்கில் படித்து தேர்வெழுத வருகிறான்.

அலட்சியமே லட்சியமென இருக்கும் நம்ம ஊர்ப்பையன் பணிக்கு விண்ணப்பம் போடுகிறான். ஹால்டிக்கெட் வந்ததும் பரிட்சை எழுத போய்விடுகிறான். வீட்டில் திட்டுகிறார்களே என்று கடமைக்கு எந்த சிலபஸிலும் ஒத்துப் போகாத ஒரு புத்தகத்தை வாங்கி படிக்கிற மாதிரி பாவ்லா காட்டுகிறான்.

பிறகு பெருவாரியா அவன் தான் தேர்வாவான், நம்மாளு எப்படி அவனுடன் மோதி ஜெயிப்பது. அலட்சியம் மட்டும் காரணமில்லை. வடமாநிலங்களை ஒப்பிடும் போது நாம சீக்கிரம் முன்னேறியதும் முக்கியமான காரணம்.

ஐடிஐயில் ரயில்வேக்கென அதிக வாய்ப்புள்ள ட்ரேட்கள் இரண்டு தான் தான், கார்ப்பெண்டர், பெயிண்டர். இதன் பிறகு வெல்டர், பிட்டர், எலட்ரிசியன் வரும். ஆனா நம்மாளு பத்தாவதில் குறைச்சலா மார்க் எடுத்து ஐடிஐயில் சேர வரும் போது தீண்டத்தகாததாக ஒதுக்கும் ட்ரேட்கள் கார்ப்பெண்ட்டரும், பெயிண்டரும் தான். கேட்டால் எவனாவது இரண்டு வருடம் இந்த பிரிவை படிப்பா எடுத்து படிப்பானானு சொல்வான். அவனைப் பொறுத்தவரைக்கும் அப்படி பெயிண்டர் படிச்சா வீட்டுக்கு தான் சுண்ணாம்படிக்கனும்னு தோணும், இதுக்கு எதுக்கு படிக்கனும்னு கேப்பான். கார்ப்பெண்டரும் இந்த நிலை தான்.

ஆனால் மேற்கு வங்காளத்திலும் பீகாரிலும் நிறைய கல்வி நிறுவனங்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வை படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தி அவர்களை படிக்க வைக்கிறது. போட்டி மிகக் குறைவாக இருக்கும் ட்ரேட்டில் சுமாரா எழுதினாலே பாசாகலாம். ஆனால் இவன் தான் பயிற்சி நிலையத்தில் பக்காவா தயாராகி வருகிறானே. வந்து பாஸாகி வேலைக்கு வந்து விடுகிறான்.

முக்கியமான விஷயம் ரயில்வேயில் மூன்று வகையில் தான் வேலைக்கு வர முடியும். ஒன்னு ஆர்ஆர்பி மூலம் தேர்வாவது. இரண்டு வாரிசுதாரர் உரிமையில் வேலைக்கு வருவது. மூன்றாவது பங்களா ப்யூன் எனப்படும் பெரிய ஐஆர்எஸ் ஆபீசர் வீட்டில் எடுபிடியாக வேலை தொடங்கி மூன்று வருடம் கழித்து பணி நிரந்தரம் பெற்று தொழிற்சாலைகளுக்கு இடம் மாறுவது.

பங்களா பியூன் வருடத்திற்கு நூறு இருக்கலாம். அதில் சில இடங்களில், கவனிக்க, சொற்பமாக தான் பணம் விளையாட வாய்ப்பிருக்கிறது. இரண்டாவதான வாரிசுதாரர் வேலையில் முறைகேடு பண்ணவே முடியாது.

ஆர்ஆர்பி மூலம் நேரடி தேர்வாவதில் முறைகேடு நடக்க வாய்ப்பே கிடையாது. அதில் அவ்வளவு கெடுபிடியான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. விடை திருத்துபவனுக்கு எந்த சூழலிலும் மாணவனின் பெயரோ ரோல் நம்பரோ தெரிய வாய்ப்பே இல்லை.

எனவே தேவையில்லாமல் குறை சொல்வதை விட்டு விட்டு பரிட்சைக்கு நம் பிள்ளைகளை தயார் செய்து முறை யான பயிற்சி நிலையங்களில் பயிற்றுவித்து தேர்வுக்கு அனுப்பி தேர்ச்சி பெறும் வேலையை பார்ப்போம்.

எம். செந்தில்குமார்