October 18, 2021

60 வயது மாநிறம் படத் தயாரிப்பை கலைப்புலி தாணு-விடம் ஏன் கொடுத்தேன் – பிரகாஷ் ராஜ்!

யதார்த்த இயக்குநர் ராதாமோகன் இயக்கியுள்ள படம் ‘60 வயது மாநிறம்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணுி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை சென்சார் குழுவினர் பார்வைக்கு எடுத்துச் செல்ல, சென்சார் குழுவினர் இப்படத்திற்கு அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இந்த படம் கன்னடத்தில் வெளியாகி பேசப்பட்ட ‘GODHI BANNA SADHARANA MAYKATTU’ என்ற படத்தின் ரீமேக்காம்! அனைத்து வேலைகளும் முடிவடைந்து, சென்சாரும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கும் நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது.

இதில் பேசிய பிரகாஷ் ராஜ், “ஒரு அழகான விஷயம், ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது. இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன். ஆனால் அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. அது மட்டுமில்லாமல் இன்றைய தேதியல் ஒரு படம் எடுப்பது கஷ்டம். எடுத்தாலும் வியாபாரம் செய்வது அதைவிடக் கஷ்டம். அப்படியே வியாபாரமும் நடந்து விட்டால்… நல்ல நல்ல தியேட்டர்கள் கிடைத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கஷ்டம். இது தான் இன்றைய துர்பாக்கிய நிலைமை ஆகிவிட்டது. இந்நிலையில் அதற்கெல்லாம் சாமர்த்தியம் எனக்கு இருக்காது என்பதை உணர்ந்து கொண்டேன். கடந்த காலத்தில் 20 படங்களை எடுத்திருந்தும் (அபியும் நானும், பயணம், மொழி… இப்படி) அதில் பெரும்பாலான படங்களை மக்களிடம் சரியாகக் கொண்டு போக முடியாமல் தவித்துப் போனேன்.

ஆகவே இந்த மூன்றிலும் கில்லாடியாய் இருக்கும் (படம் பிரம்மாண்டமாய் எடுப்பதில், எடுத்த படத்தை வியாபாரம் செய்வதில், வியாபாரம் செய்த படத்தை நல்ல தியேட்டர்களில் கொண்டு ோய் சேர்ப்பதில்) கலைப்புலி எஸ்.தாணுவைப் பிடித்தேன். இந்த . கலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி என்பதால் அவரையே தயாரிக்கும்படி முழு உரிமையையயும் அவருக்கே தந்துவிட்டேன்’ என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.

மேலும் அவர் பேசும் போது, “நானும் ராஜமோகனும் இணைந்தால் அது ஒரு சுந்தரக் கலவை என்று சொன்னார் கலைப்புலி எஸ்.தாணு. ஆனால் நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை. இளையராஜா சார் என்னை தொடர்புகொண்டு எனது குரல் வேண்டும் என்று மட்டும் தான் கேட்டார். மற்றபடி ராதாமோகன் எனக்காக டப்பிங் பேசினார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது.

விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல தீனியாக நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது. குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கக் கூடிய படம் தரும் ராதா மோகன் ஒரு பலம் என்றால் இசை ஞானி இளையராஜா ‘மெகா’ பலம். அப்பா – பிள்ளை (எனக்கும்–விக்ரம் பிரவுக்கும்) இடையிலான ஒரு உறவை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லி இருக்கும் சித்திரம் உன்னத படைப்பாக வந்திருக்கிறது ‘60 வயது மாநிறம்’ என்றும் கூறினார்.