October 22, 2021

ஆறுமுகசாமி ஆணையம் அத்து மீறி விசாரணை நடத்துது யுவர் ஆனர்! – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடி இருந்த போதும் அன்றாடம் செய்திகளில் இடம் பெற்று விடுவது வாடிக்கை. அந்த வகையில் அவர் காலமான பின்னரும் கூட அவர் மரணத்தில் சந்தேகம் என்ர சர்ச்சை கிளம்பி அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். தற்போது இந்த ஆணையம் தன் விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்போலோ மருத்துவமனை சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை ஐகோர்ட்ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் “விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளினால், எங்கள் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. ஏன் என்றால், விசாரணை ஆணையம் தேவையில்லாத விவரங்களை எல்லாம் கேட்கிறது.அரசு டாக்டர்கள் சாட்சியம் அளிக்கும்போது, அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எங்கள் ஆஸ்பத்திரி தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. எனவே, மருத்துவ விவரங்கள் புரிந்துகொள்ள முடியாததால், 21 துறைகளை சேர்ந்த டாக்டர்களை கொண்ட குழுவை அமைக்கும்படி கடந்த டிசம்பர் மாதம் எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையையும் ஆணையம் நிராகரித்துவிட்டது. எனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்று கோரி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ”ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்பை மீறி விசாரணை நடத்துகிறது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு” என வாதிட்டார்.

”அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், பாரபட்சமாக செயல்படுவதாகவும், 18 ஆலோசகர்கள், 6 எய்ம்ஸ் மருத்துவர்கள், 12 பிற மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். எனவே, போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா என ஆணையம், விசாரிப்பது வரம்பு மீறிய செயல்” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆணையத்தின் விசாரணை வரம்பில், ”ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளதே தவிர, மாற்று சிகிச்சை பற்றி விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வில்லை” எனவும் சுட்டிக்காட்டினார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே காணொளி காட்சி மூலமும், 30 மருத்துவர்கள் நேரிலும் சாட்சியம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (மார்ச் 5) தள்ளிவைத்தனர்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, “விசாரணையைத் தடுக்கவே அப்பல்லோ சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெ. மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது” என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது நினைவுக் கூறத்தக்கது.