October 24, 2021

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப் 14ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே, “ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மற்றொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறித்து அந்நாட்டுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அந்த நாடு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்திய விமான படை கொண்டு தீவிரவாத தாக்குதலை நடத்தினோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத இயக்கத்தின் மற்றொரு தாக்குதலை தடுக்கவே இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் கொல்லப்பட்டார் என்றார். பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் மசூத் அசார்.

முன்னதாக இந்தத் தாக்குதல் குறித்து ஒரு செய்தி நிறுவனம், ”இந்தியாவின் போர் விமானங்கள் எல்லை கடந்து பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டைதீவிரவாதிகள் முகாம் மீது வீசி முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் இந்த நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், ”முஸாஃபராபாத் துறைமுகத்தில் இந்திய விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. பாலாகோட் பகுதியில் பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து அவை தப்பித்துச் சென்றன. பாகிஸ்தானின் விமானப் படை இந்தியாவுக்கு உடனடியாக பதிலடி தாக்குதல் அளித்தது. இதில் பாகிஸ்தானுக்கு உயிரிழப்பும், சேதங்களும் இல்லை” என்று கூறியுள்ளார்.