March 26, 2023

காஷ்மீரில் பயங்கரவாதிகள் காட்டுத்தனமாக நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் காட்டுத்தனமாக நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவந்திபுரா பகுதியில் உள்ள ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் 78 பேருந்துகளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்த ஒரு பயங்கரவாதி, சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்த பேருந்துகள் மீது வாகனத்தை மோதினார். இதில் வீரர்கள் இருந்த பேருந்துகள் வெடித்து சிதறின. அதன் பின் சில பயங்கரவாதிகள் பேருந்துகள் மீது இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

மதியம் 3.15 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பு படை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதனை தொடர்ந்து தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தது பற்றி டிஐஜியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்.

இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சி.ஆர்.பி.எப். வீரர்களின் நியாயம் வீண் போகாது என தெரிவித்து உள்ளார். உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பர். மேலும் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்தார்.